Published : 20 Aug 2021 06:39 AM
Last Updated : 20 Aug 2021 06:39 AM

கடைகள் வாடகை நிலுவை தொகை ரூ.38.70 கோடியாக உயர்வு - நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் உதகை நகராட்சி

உதகை

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி மார்க்கெட்டில் மொத்தம் 1,587 கடைகள் உள்ளன. கடை உரிமையாளர்கள் வாடகை தொகையை செலுத்தாததால் நகராட்சி நிர்வாகத்துக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டு, மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையர் தலைமையில் வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 1.7.2016-ம் தேதி முதல் வாடகை நிலுவை தொகை பாக்கி வைத்துள்ள உரிமையாளர்கள் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேற்கூரை தகரத்தால் ஆன கடைகள் நகராட்சி நிர்ணயித்த வாடகையில் 75 சதவீதம், ஆஸ்பெட்டா சீட் உள்ள கடைகள் 60 சதவீதம், கான்கிரீட் போடப்பட்ட கடைகள் 50 சதவீத நிலுவை தொகையை கணக்கிட்டு செலுத்த வேண்டும். இல்லையென்றால் நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், நகராட்சி மார்க்கெட்டில் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டுவந்த 12 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இதுதொடர்பாக, நகராட்சி வருவாய்த் துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘கடந்த 1-7-2016 முதல் நகராட்சி மார்க்கெட்டில் உள்ள 1587 கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதில், மண்டல அளவிலான கண்காணிப்பு குழு ஏற்படுத்தி வாடகை மறு நிர்ணயம் மேற்கொள்ள தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், குழு அமைக்கப்பட்டு வாடகை மறு நிர்ணயம்செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை வியாபாரிகளும் ஏற்றுக்கொண்டு நிலுவை வாடகை தொகையை செலுத்த உறுதி அளித்தனர். ஆனால், முழுமையாக செலுத்தாமல் உள்ளனர். 4 ஆண்டுகளாக வாடகை செலுத்தாததால் நிலுவைத் தொகை மட்டும் ரூ.38.70 கோடியாக உயர்ந்துள்ளது.

இதனால், நகராட்சிக்கு மிகுந்த நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.நகராட்சி நிர்வாகம் தமிழக மின்சார வாரியத்துக்கு ரூ.17 கோடி, பணியாளர்களுக்கான சேமநலநிதி நிலுவைத் தொகை ரூ.3.63 கோடி,ஓய்வு பெற்றவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.75.79 லட்சம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் பணியாளர் மற்றும் நகராட்சி பங்கு தொகை ரூ.2.54 கோடி என மொத்தம் ரூ‌.23.50 கோடி கொடுக்க வேண்டியது உள்ளது. 172 கடை உரிமையாளர் கள் மட்டுமே மாதந்தோறும் வாடகை செலுத்தி வருகின்றனர்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x