Published : 20 Aug 2021 06:41 AM
Last Updated : 20 Aug 2021 06:41 AM
புதுச்சேரி அரசு விவசாயத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நெற்களஞ்சியமான காரைக்கால் மாவட்டம், புவியியல் ரீதியாக தலைநகரம் புதுச்சேரியிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக டெல்டா பகுதிகளான நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களையொட்டி அமைந்துள்ளது. காவிரி கடைமடைப் பகுதியாக காரைக்கால் இருப்பதால், விவசாயம் சார்ந்த செயல்பாடுகளை தமிழக டெல்டா மாவட்டங்களைச் சார்ந்தே செய்ய வேண்டியிருக்கிறது. இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் 1990-களில் 17 ஆயிரம் ஹெக்டேராக இருந்த சாகுபடி பரப்பளவு, தற்போது 6 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள், புதுச்சேரி அரசின் பட்ஜெட்டில் வேளாண்மைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
புதுச்சேரியில் ஆக.26-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காரை மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் டி.கே.எஸ்.எம்.கனகசுந்தரம் கூறியது:
தமிழகத்தைப் போல புதுச்சேரி அரசும் வேளாண்மைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். எனவே, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்து, பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.
ஆள் கூலி, இடுபொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான விலை விவசாயிகளுக்கு கட்டுபடியாவதில்லை. எனவே, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள், மானியங்கள் மற்றும் சாகுபடி நிலப்பரப்பை அதிகப்படுத்தும் வகையில் புதுவிதமான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும். மேலும், நெல் சாகுபடிக்கு வழங்கப்படும் உற்பத்தி மானியத் தொகையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், தென்னை விவசாயிகள் பலனடையும் வகையிலும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றார்.
மேலும், காரைக்காலில் ஆண்டுதோறும் மாநில அரசு மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். அரசு சார் நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து, மானிய விலையில் விதைநெல் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களை விற்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT