Published : 19 Aug 2021 08:00 PM
Last Updated : 19 Aug 2021 08:00 PM

கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை அப்படியேதான் இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின் வேதனை

சென்னை

கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்தார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

''திமுக எப்போதெல்லாம் ஆட்சி அமைக்கிறதோ, அப்போதெல்லாம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேன்மைக்கான நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.

Ø கல்வி, வேலைவாய்ப்பில் அம்மக்கள் உரிய இடங்களைப் பெற வேண்டும் என்பது முதலாவது.

Ø சமூக அமைப்பில் அவர்கள் எந்தச் சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பது இரண்டாவது.

Ø சாதியைக் காரணம் காட்டி அவர்களது வளர்ச்சி தடுக்கப்படக் கூடாது என்பது மூன்றாவது.

Ø அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து மட்டங்களிலும் அவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பது நான்காவது.

Ø அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது ஐந்தாவது.

- இத்தகைய சிந்தனை கொண்ட அரசுதான் திமுக அரசு – அப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘சூ… மந்திரகாளி!’ என்பதைப் போல நாளையே இவை எல்லாம் நடந்துவிடும் என்று நானும் நினைக்கவில்லை; நீங்களும் நினைக்கமாட்டீர்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த இலக்கை அடைவதற்கான நமது தூரம் குறைக்கப்பட வேண்டும். அதற்கு அரசும், உங்களைப் போன்ற சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும், சமுதாய அமைப்புகளைச் சார்ந்தவர்களும், அரசு அதிகாரிகளும், பொதுமக்களும் உழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இத்தகைய சூழலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கக்கூடிய தீண்டாமைச் சம்பவங்களைக் கேள்விப்படும்போது வருத்தம் ஒருபுறம் ஆத்திரம் வருகிறது - கோபம் வருகிறது. அதை யாரும் மறுக்க முடியாது.

கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் சாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பது அப்படியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் செய்ய இன்னும் பல ஆண்டுகாலம் கடக்க வேண்டும் என்றே தெரிகிறது. இதனைச் சட்டத்தின் மூலமாக ஓரளவு சரிசெய்ய முடியும். அத்தகைய சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் 1955, வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 ஆகிய இரு சட்டங்களும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் தீண்டாமை வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக நிறைவேற்றப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 17-ன்படி, தீண்டாமை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், தீண்டாமை பாகுபாட்டைக் காட்டுவது சட்டப்படி தவறானது என்ற எண்ணம் சிலருக்கு இல்லை. அதை தைரியமாகவே செய்கிறார்கள். இத்தகைய சட்ட மீறல்கள் தடுக்கப்பட்டாக வேண்டும்; தண்டிக்கப்பட்டாக வேண்டும். தீண்டாமை குற்றம் இழைத்தவர் தப்பிவிடக் கூடாது. அதே நேரத்தில், அந்தச் சட்டத்தை யாரும் தவறாகப் பயன்படுத்திவிடவும் கூடாது.

இந்த அரசு பொறுப்பேற்றதும் ஆதி திராவிட மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைச் சட்ட விதியின்படி, மாநில அளவில் இருக்கக்கூடிய உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுவைத் திருத்தி அமைத்திருக்கிறோம். அரசும் அரசியல் கட்சிகளும் ஒன்றிணையும் குழுவாக இது அமைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய வகையிலே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிநிதிகளும், சட்டம் உருவாக்குபவர்களும் இணைந்து இதிலே பங்கெடுத்திருக்கிறார்கள்.

மக்கள் மேம்பாட்டைப் பொறுத்தவரையில், 2021-2022ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மொத்த நிதி ஒதுக்கீட்டில், ஆதி திராவிடர் நலத் திட்டங்களுக்காக ரூ.3,588.87 கோடியும், பழங்குடியினர் நலத் திட்டங்களுக்காக ரூ.543.42 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கூறுகள் திட்டம் என அழைக்கப்பட்டு வந்த, ஆதி திராவிடர் துணைத் திட்டத்தின்கீழ் ரூ.14,696.60 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்தின் கீழ் ரூ.1306 கோடியும் ஒதுக்கப்பட்டு, பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

இத்துறையின்கீழ் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை மேம்படுத்த சிறப்பு மூலதன ஒதுக்கீடாக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக் கூடங்கள் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நபார்டு வங்கியின் ஊரகக் கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்தின் கீழ் ரூ.123 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காலிப் பணியிடங்கள் கணக்கிடப்பட்டு நிரப்பப்படும்.

தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் நலக் குழு ஆகியவற்றைத் திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x