Published : 19 Aug 2021 06:58 PM
Last Updated : 19 Aug 2021 06:58 PM
மாதவரம் பகுதியில் 4,400 கிலோ எடை கொண்ட குட்கா பாக்கெட்டுகள், 1 கன்டெய்னர் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கிடங்கில் குட்கா பாக்கெட்டுகளைப் பதுக்கி வைத்திருந்த கிடங்கு உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காகச் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவாலின் ‘‘புகையிலைப் பொருட்கள் ஒழிப்புக்கான நடவடிக்கை’’ (DABToP -Drive Against Banned Tobacco Products) மூலம் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் தீவிரமாகக் கண்காணித்து, குட்கா, மாவா, ஹான்ஸ் ஆகிய தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைக் கடத்தி வருபவர்கள், தயார் செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்காணித்து, கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், காவல் குழுவினர் இன்று (19.08.2021) காலை மாதவரம், 100 குடோன் என்ற இடத்திலுள்ள எண்.19 கிடங்கை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பெருமளவு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அதன் பேரில், தடை செய்யப்பட்ட பொருட்களை சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்த கிடங்கின் உரிமையாளர் சந்திரபிரகாஷ் (44) என்பவரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து 4,400 கிலோ எடை கொண்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள், குட்கா புகையிலை பாக்கெட்டுகளைக் கடத்தி வந்த 1 கன்டெய்னர் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்திரபிரகாஷ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT