Published : 19 Aug 2021 05:16 PM
Last Updated : 19 Aug 2021 05:16 PM
கும்பகோணம் அருகே 100 சதவீதம் கரோனோ தடுப்பூசி செலுத்திய ஊராட்சி சார்பில் இன்று சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதையடுத்து சுகாதாரப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு இது தொடர்பாகப் பரிந்துரையை வழங்கியுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் சோழன்மாளிகை ஊராட்சி உள்ளது. இங்கு 9 வார்டுகளில் 962 வீடுகள் உள்ளன. இதில் 18 வயதுக்கு மேல் 1,950 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு, 100 சதவீதம் பூர்த்தி அடைந்ததைத் தொடர்ந்து இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். விழாவில் பட்டீஸ்வரம் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் பிரேமா, மருத்துவ அலுவலர் புனிதவதி, சுகாதாரப் பணியாளர்கள், ஊராட்சி மன்றச் செயலர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பி.ஜெயக்குமார் கூறுகையில், ''கரோனா முதல் அலை வந்தபோது நாங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்தோம். மேலும் தொடர்ந்து கரோனா இரண்டாவது அலை வந்தபோது பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து, வீட்டுக்கு வீடு சென்று மருத்துவப் பரிசோதனைகள் செய்தும், முகக்கவசங்களையும் வழங்கினோம், வாரம் இரு முறை ஊராட்சி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கரோனோ தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராமத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சுகாதாரப் பணிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது'' என்றார்.
இதுகுறித்து பட்டீஸ்வரம் அரசு வட்டாரத் துணை மருத்துவமனை மருத்துவ அலுவலர் புனிதவதி கூறுகையில், ''பட்டீஸ்வரம் மருத்துவமனைக்கு 11 ஊராட்சிகள் உள்ளன. இதில் கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது 38 பேர் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதும், சோழன்மாளிகை ஊராட்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வந்தனர். அதன்படி 18 வயது நிரம்பிய 1,950 பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் கடந்த ஆக.4-ம் தேதி தொடங்கி ஆக.14 ம் தேதி வரை வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளே பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளன.
தற்போது இந்த ஊராட்சியில் 100 சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்டதை அடுத்து, இதன் விவரத்தை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்துள்ளோம். தமிழக அளவில் இந்த ஊராட்சி மூன்றாவது ஊராட்சியாக 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஊராட்சியாக சுகாதாரத் துறையின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அனைவரும் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டதையடுத்து இந்த கிராம மக்கள் சார்பில் இன்று, சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT