Published : 19 Aug 2021 04:24 PM
Last Updated : 19 Aug 2021 04:24 PM
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க 1913 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஆக. 19) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 2,129 சிறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 1,260 கொசு ஒழிப்பு நிரந்தரப் பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என, மொத்தம் 3,619 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 256 மருந்து தெளிப்பான்கள், 167 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்ப்ரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகை பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களைக் கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்கள் அருகாமையில் உள்ள பொது இடங்களில் நீர் தேங்கும் இடங்கள், கொசுப்புழுக்கள் உருவாக வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்தால் மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இத்தகவல்களின் வாயிலாக கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள இடங்களில் பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படும்.
தற்பொழுது மழை அவ்வப்பொழுது பெய்து வருவதால், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் கொசுப்புழு உருவாக வாய்ப்புள்ள இடங்களைத் தூய்மையாகப் பராமரித்து மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது".
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT