Last Updated : 19 Aug, 2021 01:19 PM

3  

Published : 19 Aug 2021 01:19 PM
Last Updated : 19 Aug 2021 01:19 PM

ஆங்கிலக் கடிதத்துக்கு இந்தியில் பதிலா?- மாநில மொழியில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

மதுரை

மதுரை எம்.பி.யின் ஆங்கிலக் கடிதத்துக்கு இந்தியில் பதில் கடிதம் அனுப்பிய விவகாரத்தில் மத்திய அரசும், அதன் அதிகாரிகளும் இந்திய அலுவல் மொழி சட்டத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''மத்திய ரிசர்வ் படையில் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவில் 780 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு டிச. 20-ல் நடைபெறுகிறது. இதற்குத் தமிழகம், புதுச்சேரியில் ஒரு தேர்வு மையம் கூட அமைக்கவில்லை. இதனால் இவ்விரு மாநில விண்ணப்பதாரர்களின் நலனுக்காக குறைந்தபட்சம் ஒரு தேர்வு மையம் அமைக்கக் கோரி உள்துறை அமைச்சகம் மற்றும் சி.ஆர்.பி.எஃப். பொது இயக்குநருக்கு அக். 9-ல் கடிதம் அனுப்பினேன்.

எனது கடிதத்துக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், நவ.9-ல் இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பியிருந்தார். இந்தியில் பதில் அளித்தது சட்ட விதி மீறலாகும். இதுதொடர்பாக உள்துறை இணை அமைச்சகத்திற்கு நவ. 19-ல் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் வரவில்லை. இந்தியில் அனுப்பிய கடிதத்தைத் திரும்பப் பெறவோ, ஆங்கிலத்தில் கடிதம் அனுப்பவோ நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியில் மட்டுமே பதில் அளிக்கும் நடைமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யக்கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பும் கடிதங்களுக்கும் இந்தியில் பதிலளிப்பது தொடர்கிறது. இது அரசியலமைப்புச் சட்ட உரிமைகளுக்கும், 1963-ம் ஆண்டின் அலுவல் மொழிச் சட்டத்திற்கும் முரணானதாகும். இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் உரிமைகளை மீறுவதாகும்.

எனவே, தமிழக அரசுக்கும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கும் இந்தி மொழியில் கடிதம் அனுப்பக்கூடாது என்றும், ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். எனக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அனுப்பிய இந்தி கடிதத்தில் ஆங்கில வடிவத்தை உடனே வழங்கவும், விதியை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீது நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு:

''தாய்மொழி என்பது மிகவும் முக்கியமானது. அடிப்படைக் கல்வி தாய் மொழியிலேயே வழங்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக தற்போது ஆங்கில வழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆங்கில மொழிக்குப் பொருளாதார அடிப்படையிலும் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இருப்பினும் எந்தத் தகவலும், விளக்கமாக இருந்தாலும் தாய்மொழியில் புரியும்போது மட்டுமே முழுமையடைகிறது.

இந்தியாவில் சில மொழிகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை. பல மொழிகள் நூறு ஆண்டுகள் பழமையானவை. ஒவ்வொரு மொழியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றின் வளர்ச்சிக்கு அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியிலேயே மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். இதை இந்திய அலுவலக மொழிச் சட்டமும் உறுதி செய்கிறது.

ஆனால் மனுதாரரின் ஆங்கிலக் கடிதத்துக்கு இந்தி மொழியில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதில் விதியை மீறும் எண்ணமில்லை என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மத்திய அரசு மற்றும் அதன் அலுவலர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும்''.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x