Published : 19 Aug 2021 01:17 PM
Last Updated : 19 Aug 2021 01:17 PM
மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் சென்னையில் தமிழ் கல்வெட்டியல் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என, மத்திய தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மணிமாறன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
"கல்வெட்டுகள், பனை ஓலை குறிப்புகள், அகழாய்வில் கிடைத்த பொருட்களிலிருந்து வரலாற்று ஆவணங்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுகளில் இருந்து கிடைப்பதால், தமிழகத்தில் 1961-ல் தொல்லியல் துறை மற்றும் கல்வெட்டியல் துறை உருவாக்கப்பட்டது.
தமிழகத்தின் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது, அகழாய்வு செய்து தமிழகத்தின் பழமைக்கு சான்றாக கிடைக்கும் பழங்கால பொருட்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பது, பழமைக்கு ஆதாரமான கலை சிற்பங்களை பாதுகாப்பது, அவற்றை அனைவரும் அறியும் வகையில் புதுப்பித்து வெளியிடுவது ஆகியன தொல்லியல் துறையின் முக்கிய பணி.
மைசூர் கல்வெட்டியல் துறையில் உள்ள ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழுடன் தொடர்புடையவை. இந்த கல்வெட்டுகள் தற்போது வரை புதுப்பித்து வெளியிடப்படவில்லை. எனவே, மைசூருவில் கல்வெட்டியல் துறையின் கீழ் உள்ள தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுகளை தமிழக தொல்லியல்துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை நவீன தொழில்நுட்ப முறையில் பாதுகாக்கவும், அதற்கு தேவையான நிதி ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும்".
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசாமி அமர்வு இன்று (ஆக. 19) பிறப்பித்த உத்தரவு:
"சென்னையில் இயங்கி வரும் மத்திய தொல்லியல்துறையின் கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மத்திய தொல்லியல்துறையிடம் உள்ள தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும் சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்துக்குள் மாற்ற வேண்டும்.
மத்திய தொல்லியல்துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு உள்பட அனைத்துப் பிரிவுகளில் போதுமான நிபுணர்களை பணியமர்த்த வேண்டும். சென்னை கல்வெட்டியல் பிரிவுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும்".
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT