Published : 19 Aug 2021 03:12 AM
Last Updated : 19 Aug 2021 03:12 AM
முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது பெயரில் ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்பு உணர்வோடு கல்விப் பணியாற்றி வரும்ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது அளித்து கவுரவித்து வருகிறது.
மாநில நல்லாசிரியருக்கான விருதுக்கு தேர்வு செய்யும் பணி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் நடைபெற்று வருகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் நிகழாண்டிலாவது அரசியல் குறுக்கிடு இன்றி தகுதியானவர்களுக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே ஏற்பட்டிருந்தது.
ஆனால், கடலூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற நேர்காணலில் 46 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மேலும் சிலர் அழைக்கப்பட்டதால், விண்ணப்பித்த ஆசிரியர்கள் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 2020-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியருக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்ட நிலையில், மாநில நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களும் ஆசிரியர்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது.
விண்ணப்பங்கள் நாளை மறுதினத்திற்குள் (ஆக 20) மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தவர்களிடம் நாளை நேர்காணலை நடத்துகின்றனர் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
இதனிடையே இந்தாண்டு மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் குறித்து சில வழிகாட்டு நெறிமுறைகளையும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக கரோனா தொற்று பரவல் காலத்தில் இணைய வழிக் கல்வி உள்ளிட்ட மாணவர்களை நேரடியாகச் சென்றடையும் வகையில் கல்விப் பணி ஆற்றியிருக்க வேண்டும், கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மேற்கூறிய வழிகளில் கல்விப் பணி ஆற்றாத ஆசிரியர்களை அறவேத் தவிர்க்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக கடலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களில் பள்ளிக்கே வராதவர்கள், பள்ளியின் சேர்க்கையை குறைத்து பள்ளிக்கே மூடுவிழாநடத்தியவர்கள், அரசியல் பின்புலம்உள்ளவர்கள், மாவட்டக் கல்வி அலுவலரின் மனைவிகள் போன்ற வர்களுக்கே வழங்கப்பட்டதால், இந்த விருது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
புதிய அரசு பதவியேற்றிருக்கும் சூழலில் இந்த ஆண்டிலாவது அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.
இதனிடையே விண்ணப்பித்த ஆசிரியர்களிடம் இன்று நேர்காணல் என சுற்றறிக்கை அளித்திருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், திடீரென நேற்றே நேர்காணலை நடத்தியதால், ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் நேற்று 46 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால், இடையிடையே சில ஆசிரியர்கள் அரசியல் கட்சிப் பிரமுகர்களின் பரிந்துரைக் கடிதத்தோடு நேர்காணலுக்கு வந்தனர். இதனால்முறையாக விண்ணப்பித்த ஆசிரியர்கள் தடுமாற்றுத்துக்குள்ளாயினர். மேலும் ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் கூடுதலாக சில ஆசிரியர்கள் பெயரும் சேர்க்கப்பட்டதால், கடந்த ஆண்டு நிலையே இந்த ஆண்டும் தொடருமோ என்ற அச்சம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
“கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில்,நேற்று வரை தன்னை பணியிலிருந்து விடுவித்துக்கொள்ளாமல், விண்ணப்பதாரர்களிடம் நேர்காணலை நடத்தியது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
நேர்காணலின் கேட்கப்பட்ட கேள்விகளிலேயே அவர் எப்படி நல்லாசிரியர்களை தேர்வு செய்திருப்பார் என்று யூகித்துக் கொள்ள முடிந்தது” என்று நேர்காணலில் பங்கேற்ற ஆசிரியர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT