Published : 18 Aug 2021 08:15 PM
Last Updated : 18 Aug 2021 08:15 PM
கோடாநாடு விவகாரத்தில் மறுவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம், கோவையில் நேற்று தொடங்கியது. 2-வது நாள் கூட்டம் இன்று(18-ம் தேதி) நடந்தது. இக்கூட்டத்தின் நிறைவில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுதொடர்பாக, இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, இந்தியாவில் உள்ள மக்கள் மீது பல்வேறு வகைகளில் தினமும் கடுமையான தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
இதை மக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில், தமிழகத்தில் 1,000-ம் இடங்களில் ‘மக்கள் விசாரணை மன்றம் - மோடி அரசின் மீது குற்றப்பத்திரிகை’’ என்ற நிகழ்ச்சி நடத்த உள்ளோம். பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையேற்றம், 3 வேளாண் சட்டங்கள், தொழிலாளர் விரோத சட்டங்கள், பெகாசஸ் உளவு பார்ப்பு, நாடாளுமன்றத்தில் விவாதம் இல்லாமல் பல சட்டங்களை நிறைவேற்றுவது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மக்கள் முன்னிலையில், பிரதமர் நரேந்திரமோடியின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
கட்சி தலைமை அறிவுறுத்தல்லபடி, செப்டம்பரில், தமிழகத்தில் 10 நாட்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடு வீடாக பிரச்சாரம் செய்வது, திண்ணைப் பிரச்சாரம் செய்வது, மத்திய அரசு மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகள் மக்களிடம் துண்டுபிரசுரங்கள் விநியோகித்து எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். இந்த நிகழ்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழத்தில் உள்ள அனைத்து ரயில்நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்களும் அப்போது முற்றுகையிடப்படும். கட்சியின் 23-வது மாநில மாநாடு, பிப்ரவரி மாதம் மதுரையில் நடத்தப்படும். செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில், கரோனா தடுப்பூசி தயாரிக்க தமிழகத்துக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அனுமதி தராமல் உள்ள மத்தியஅரசைக் கண்டிக்கிறோம்.
தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில், ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதியம் முறையிலும் பணியாற்றுபவர்களை பணி நிரந்திரம் செய்திட வேண்டும். தமிழகத்தில் பாஜக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்படுகின்றனர். யாத்திரை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளின் மேயர், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தலைவர் பதவிகளுக்கு மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக ஆட்சியில் இருந்த பலர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, அதன் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். கோடாநாடு விவகாரத்தில், அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே, பல செய்திகள் வெளியாகின. இவ்விவகாரத்தில், சம்பந்தப்பட்ட சாட்சிகள் கூறும் தகவல்களை அடிப்படையாக வைத்து மறுவிசாரணைக்கு உத்தரவிட்டு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தான் மத்திய இணை அமைச்சராவதை தடுத்ததாக எல்.முருகன் முன் வைத்த குற்றச்சாட்டுகள் அபாண்டமானது. சாதி அடிப்படையிலான அரசியலுக்கு முனைப்பு காட்டக் கூடாது.
நடப்பு சட்டப்பேரவைத் தேர்தலில் தாங்கள் தோற்று விடுவோம் என அதிமுகவுக்கு தெரியும். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதாலேயே கூட்டணியை அதிமுக ஏற்றுக் கொண்டனர். பாஜக பாதுகாப்பில் இருந்து கொண்டு, தமிழகத்தில் ஆட்சி நடத்தும் கட்சியாக அதிமுக மாறியது வேதனைக்குரிய செய்தி. பெகாசஸ் விவகாரம் குறித்த கேள்விகளுக்கு மத்திய அரசு உரிய பதில் அளிக்கவில்லை. பெகாசஸ் விவகாரம் அரசியல் சட்ட அடிப்படைக்கே விரோதமானது. 15 ஆண்டுகளுக்கு மேல் பழைய வாகனங்களை பயன்படுத்தக்கூடாது என மத்தியஅரசு தெரிவித்து இருப்பது கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமானதே ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வின் போது, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், எம்.பி. பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோர் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT