Published : 18 Aug 2021 07:32 PM
Last Updated : 18 Aug 2021 07:32 PM

ஆரணி அருகே விவசாயிடம் நெல் மூட்டைகளை எடை போட லஞ்சம்: இருவர் கைது

ஆரணி

ஆரணி அருகே பையூரில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயி ஒருவரிடம் இருந்து நெல் மூட்டைகளை எடை போட ரூ.2790 லஞ்சம் வாங்கிய செயலாளர் உள்ளிட்ட இரண்டு பேரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள பையூர் கிராமத்தில் ஆரணி வேளாண்மை உற்பத்தியாளர் விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சேவூர் அடுத்த சாணார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் தனது 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விளைந்த 62 நெல் மூட்டைகளை விற்பனைக்காக எடுத்துச் சென்றுள்ளார்.

நெல் கொள்முதல் நிலையத்தின்வேளாண் சங்க செயலாளர் ஜெகதீஸ்வரன் (42), ஒரு மூட்டைக்கு ரூ.45 வீதம் பணம் கொடுத்தால் மட்டுமே நெல் மூட்டைகளை எடை போட்டு பில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

அவர் கூறியபடி 62 நெல் மூட்டைகளுக்கு ரூ.2,790 கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால், பணத்தை கொடுக்க விரும்பாத ஆனந்தராஜ், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸில் நேற்று (ஆக.17) புகார் அளித்துள்ளார். அவரிடம் ஜெகதீஸ்வரன் லஞ்சமாக கேட்ட ரூ.2790-க்கான பணத்தில் ரசாயனம் தடவி கொடுத்தனுப்பினர்.

அந்தப் பணத்தை நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த கிடங்கு பாதுகாவலர் ராஜேந்திரன் (60) என்பவர் மூலம் ஜெகதீஸ்வரன் இன்று (ஆக.18)பிற்பகல் பெற்றுக்கொண்டார். அப்போது, லஞ்ச ஒழிப்புப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மைதிலி, அன்பழகன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஜெகதீஸ்வரன், ராஜேந்திரன் ஆகியோரை லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்தனர்.

இதையடுத்து, ஜெகதீஸ்வரன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரிடம் சோதனை செய்ததில் கணக்கில் வராத பணம் ரூ.10 ஆயிரம் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் தொகை அனைத்தும் நெல் கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளிடம் இருந்து லஞ்சமாக பெற்றது என்பது தெரியவந்தது.

ஜெகதீஸ்வரன் கைதான தகவலை அடுத்து அங்கு திரண்ட விவசாயிகள், அவர் மீது அடுக்கடுக்கான லஞ்ச புகாரை தெரிவித்தனர். எனவே, நெல் கொள்முதல் நிலையத்தில் தினந்தோறும் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் எண்ணிக்கை எவ்வளவு என்றும் அதற்காக பெறப்பட் லஞ்சப் பணம் குறித்தும் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆரணியில் உள்ள ஜெகதீஸ்வரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x