Published : 18 Aug 2021 07:23 PM
Last Updated : 18 Aug 2021 07:23 PM
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டம் மற்றும் கிராமச் சாலை மேம்படுத்துவது குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை வகித்து பேசியதாவது:
”கடந்த 2000-ம் ஆண்டில் பிரதம மந்திரியின் சாலை திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் மூலம் 500 மக்கள் தொகையுள்ள குக்கிராமங்களுக்கு சாலை வசதி, முக்கிய இணைப்புச்சாலைகள் அமைத்தல், சாலைகளை மேம்பாடு அடைய செய்வது இதன் முக்கிய நோக்கமாகும். மத்திய, மாநில அரசுகளின் நிதி மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
குக்கிராமங்களில் இருந்து பள்ளிகள், சந்தைகள், மருத்துவமனைகள் போன்றவற்றை இணைக்கும் பிரதான மற்றும் முக்கிய ஊரக இணைப்புச் சாலைகளை மேம்படுத்த இத்திட்டம் பெரும் பயனாக உள்ளது.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின் கீழ் 291 கி.மீ., நீளத்துக்கு 134 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ரூ.76.76 கோடி நிதி கோரப்பட்டுள்ளது. ஊரக சாலைகள் கிராமப் பொருளாதாரத்தை சீர் செய்யும் பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கிராமப்புறச்சாலைகள் மேம்பட்டால் கிராமங்களில் பொருளாதாரம், கல்வி, வேளாண்மையும் மேம்மை அடையும்.
விவசாய வளர்ச்சிக்கு அடுத்து கிராமச்சாலைகள் கிராம மக்களின் கல்வி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கிராமங்களில் இருந்து நகர்ப்பகுதிகளுக்கு விளை பொருட்களை எடுத்துச்செல்லவும், நகரங்களில் இருந்து பல பொருட்கள் கிராமப்பகுதிக்கு கொண்டு செல்ல கிராமச் சாலைகள் அந்தந்த கிராம வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கிறது.
கிராமங்களில் இருந்த மண் சாலைகள் தற்போது மாற்றப்பட்ட தார்ச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கும் சாலை வசதிகள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புறங்களில் அமையும் சாலைகள் தரமானதாக இருக்க வேண்டும். இதை அந்தந்த ஊரக வளர்ச்சி பொறியாளர்கள், பிடிஓக்கள் கண்காணிக்க வேண்டும்’’. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் லோகநாயகி, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், சாலை மற்றும் பாதுகாப்பு உதவிப் பேராசிரியர் சேகர். உதவி செயற் பொறியாளர்கள் தமிழரசி, தனசேகரன், ஊரக வளர்ச்சித்துறை கண்காணிப்பாளர் அப்துல்கரீம், பிடிஓக்கள், ஊரக வளர்ச்சித்துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT