Published : 18 Aug 2021 05:57 PM
Last Updated : 18 Aug 2021 05:57 PM
மதுரையில் கலைஞர் நூலகம் அமையும் இடம், பென்னிக்குவிக் வாழ்ந்ததாக கூறுவது தவறான கருத்து என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
”தென் தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக மதுரைக்கு பல திட்டங்களை தமிழக அரசு அறிவித்து இருப்பது வரவேற்கதக்கது. மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அது குறித்த அறிவிப்பு இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. உடனடியாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலே மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து விவசாயத்தை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 58ம் கால்வாய் கட்டப்பட்டு 5 ஆண்டுகளை கடந்துவிட்டது.
இந்த கால்வாயில் பாசனத்திற்கான அரசாணை வழங்கப்படவில்லை. தண்ணீர் பாசனம் கிடைக்காமல் அப்பகுதி விவசாயிகள் பரிதவிக்கிறார்கள்.
அந்த பாசன பகுதிகளில் தண்ணீர் திறப்பதற்கான 18ம் கால்வாய் பாசன அரசாணை வெளியிட வேண்டும். மதுரை நத்தம் சாலையில் அமைக்க கூடிய கலைஞர் நூலகம் வரவேற்க தக்கது. பொதுப் பணித்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் கலைஞர் நூலகம் அமையும் இடம் பென்னிக்குவிக் வாழ்ந்ததாக கூறப்படுவது தவறான கருத்து. அதற்கான ஆதாரம் எங்கும் இல்லை. உண்மைக்கு புறமான தகவல்களை பரப்பி ஒரு அறிவு பூர்வமான நூலகம் அமைவதை தடுத்து அதனை திசைதிருப்பிவிடக் கூடாது.
ஆராய்ச்சி மாணவர்கள், அகழ்வாராய்ச்சி ஆய்வாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு இந்த நூலகம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த நூலகம் அமைக்கும் இடத்தில் உள்ள மரங்களை அகற்றுவதில் உரிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT