Last Updated : 18 Aug, 2021 05:31 PM

 

Published : 18 Aug 2021 05:31 PM
Last Updated : 18 Aug 2021 05:31 PM

விழுப்புரம் அருகே செம்மண் நிலப்பரப்பில் மீண்டும் கூழாங்கற்கள் கொள்ளை

விழுப்புரம்

விழுப்புரம் அருகே வானூார் செம்மண் நிலப்பரப்பில் மீண்டும் கூழாங்கற்கள் கொள்ளை அடிக்கப்படுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

வானூரையொட்டிய பகுதி முழுதும் பல ஏக்கர் பரப்பளவில் செம்மண் நிலப்பகுதியாக உள்ளது. இங்கு மானாவாரியாக முந்திரி பயிரிடப்படுகிறது. இந்த நிலப்பரப்பில் கூழாங்கற்கள் அதிகளவில் புதைந்துள்ளன. இதனால் விவசாயம் செய்யமுடியாது என நினைத்த விவசாயிகள், நிலங்களைக் குறைந்த விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர்.

நிலத்தை வாங்கியவர்கள் மண்ணில் கூழாங்கற்கள் வளம் உள்ளதை அறிந்து, அதனை எவ்வித அனுமதியும் பெறாமல் தோண்டி எடுத்து வெளிமாநிலங்களுக்கு கடத்திவருகின்றனர்.

சிறிய கற்களுக்கு சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை பகுதியில் அதிகத் தேவை இருப்பதால், இதற்கு அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். சிறிய மற்றும் பெரிய கற்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இவை ஒரு டன் ரூ10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் விரைவில் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் முற்றிலும் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வானுார் அருகே ராயபுதுப்பாக்கம் கிராமத்தில் இருந்து மாத்துார் செல்லும் குறுக்குப் பாதையில் செல்லும் காட்டுமேடு பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பல இடங்களில் 10 அடி ஆழத்திற்கு மேல் தோண்டி கூழாங்கற்களை எடுக்கின்றனர் என்ற தகவல் வெளியானது. உடனே வானூர் வருவாய்த் துறையினர் அப்பகுதியில் உள்ள குவாரிகளை மூடினர்.

இதற்கிடையே பெரம்பை, பங்களாமேடு பகுதியில் கடந்த சில நாட்களாக மீண்டும் கூழாங்கற்கள் எடுக்கப்பட்டு லாரிகள் மூலம் கடந்தப்படுகின்றன என செய்தி வெளியானது.

இதுகுறித்து வானூர் வட்டாட்சியர் சங்கரலிங்கத்திடம் கேட்டபோது, ''ராயபுதுப்பாக்கம் பகுதியில் கூழாங்கற்களைக் கடத்துபவர்களை எச்சரித்துள்ளோம். இனி இவை தொடர்ந்தால் காவல்துறையில் புகார் அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து கனிவ மவளத்துறையினரிடம் கேட்டபோது, ''கோட்டகுப்பம், ஆரோவில் வானூர் காவல் நிலையங்களில் இக்கொள்ளை தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு நிலுவையில் உள்ளன. மேலும் விழுப்புரம், கள்ளகுறிச்சி மாவட்டங்களுக்குத் தேவையான ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால் அனைத்துப் பகுதிகளையும் கண்காணிக்க முடியவில்லை. விரைவில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x