Published : 18 Aug 2021 02:45 PM
Last Updated : 18 Aug 2021 02:45 PM

'கலைஞர் டிவி' போல 'ஸ்டாலின் பஸ்'- உதயநிதி ருசிகரம்

சென்னை

முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியபோது எப்படி அது கலைஞர் தொலைக்காட்சி ஆனதோ, அதேபோல நம் முதல்வர் இலவசப் பேருந்து பயணம் அறிவித்த பிறகு, நகரப் பேருந்தை அனைவரும் ”ஸ்டாலின் பஸ்” என்றே அழைக்கின்றனர் என்று உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த இரண்டு நாட்களாக பட்ஜெட் அறிவிப்பு மீதான விவாதம், கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஆக. 18) மூன்றாவது நாளாக சட்டப்பேரவை கூடி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாகப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''திமுக தலைவர் தலைமையிலான அரசு இந்த 100 நாட்களுக்குள்ளாகவே எண்ணற்ற சாதனைகளைச் செய்து முடித்துள்ளது.

கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு ரூ.4000 வழங்கும் திட்டம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களைக் கொண்ட பொருளாதார ஆலோசனை குழு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை முதல்வர் கண்காணிப்பிலேயே செயல்படுத்தியது, கரோனா காலத்தில் பத்திரிகையாளர்கள்,- ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது, கரோனாவால் பலியான மருத்துவத் துறையினர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம், மருத்துவர் - செவிலியர்கள் / தூய்மைப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை தென் சென்னைக்கென்று தனி உயர் சிறப்பு மருத்துவமனை அறிவிப்பு, கோயில் சொத்துகள் மீட்பு, இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நாட்டிற்கே முன்மாதிரியாக பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ.3-ஐக் குறைத்தது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் உள்ளிட்ட ஏராளமான தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலையைக் குறைத்தது உள்ளிட்ட நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளைப் பேசாதவர்கள் நீட்டை மட்டும் குறி வைப்பது ஏன் என்று தெரியவில்லை.

மேலும் தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டதுபோல மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம் நிறைவேற்றப்பட்டது. முந்தைய திமுக ஆட்சியில் கலைஞர் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கியபோது எப்படி அது கலைஞர் தொலைக்காட்சி ஆனதோ, அதேபோல நம் முதல்வர் இலவசப் பேருந்து பயணம் அறிவித்த பிறகு, நகரப் பேருந்தை அனைவரும் ”ஸ்டாலின் பஸ்” என்றே அழைக்கின்றனர். ஆனால், இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை''.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x