Published : 18 Aug 2021 02:42 PM
Last Updated : 18 Aug 2021 02:42 PM
உற்பத்திச் செலவை குறைக்க வேண்டும் எனவும், மின்சார கட்டணத்தை உயர்த்தக் கூடாது எனவும், பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆஅக. 18) வெளியிட்ட அறிக்கை:
"தமிழகத்தில் மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை உயர்த்துவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று நிதித்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறியிருக்கிறார். கரோனா பரவல் காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்து நினைப்பது நியாயமற்றது.
சென்னையில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்த கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நிதித்துறை செயலாளர், தமிழக அரசின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
நிலைமையை சமாளிக்க மானியங்கள் ஒழிக்கப்பட வேண்டும்; மின்சாரக் கட்டணம், குடிநீர் கட்டணம் போன்றவை உயர்த்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இவை உடனடியாக உயர்த்தப்படாவிட்டாலும், அடுத்த சிறிது காலத்தில் கண்டிப்பாக கட்டணம் உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட போதே, மின்சாரக் கட்டணம், பேருந்துக் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்துவரி உள்ளிட்டவை உயர்த்தப்படும் என்ற அச்சம் எழுந்திருந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் நிதித்துறை செயலாளரின் கருத்து அமைந்திருக்கிறது.
தமிழகத்தின் நிதிநிலைமை மிகவும் மோசமாக இருப்பது உண்மை. மின்சாரக் கட்டணம், பேருந்துக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தாமல் சேவை செய்ய முடியாது என்பதும் எதார்த்தம். ஆனால், மின்சாரக் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை தமிழகத்தில் ஏற்கெனவே அதிகமாக இருக்கும் நிலையில், இன்னொரு கட்டண உயர்வை மக்களால் சமாளிக்க முடியாது.
அதுமட்டுமின்றி, மின்சார வாரியமோ, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களோ கடுமையான இழப்பில் இயங்குகின்றன என்றால், அதற்கான காரணம் என்ன? என்பதைக் கண்டறிந்து அதை சரி செய்வது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். அதை செய்யாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்துவது அரசுக்கோ, மக்களுக்கோ பயனளிக்காது.
தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ரூ.12,750 கோடி இழப்பை சந்தித்தது. 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மின்சார வாரியத்தின் இழப்பு 2015-16 ஆம் ஆண்டில் ரூ.5,750 கோடியாகவும், 2016-17 ஆம் ஆண்டில் ரூ.4,350 கோடியாகவும் குறைந்தது.
ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து மின்வாரியத்தின் இழப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அதற்குக் காரணம் மின்சார வாரியத்தில் நடைபெற்ற முறைகேடுகளும், அதிக தொகைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டதும் தான் என்பது ஆய்வில் உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் இழப்புக்கும் இதே காரணங்கள் முழுமையாக பொருந்தும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவது தான் இழப்பு ஏற்பட முக்கியக் காரணம் ஆகும். தமிழகத்தில் ஒரு கட்டத்தில் கடுமையான மின்சாரத் தட்டுப்பாடு இருந்த போது வெளிச்சந்தையிலிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியது சரியாக இருக்கலாம். ஒரு கட்டத்துக்குப் பிறகு சொந்த மின்சார உற்பத்தியை அதிகரித்து, மின்சாரத்தின் உற்பத்திச் செலவை கணிசமாகக் குறைப்பதன் மூலம் தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்சார உற்பத்தி எந்த காலக்கட்டத்திலும் சொல்லிக்கொள்ளும்படியாக அதிகரிக்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் உருவாக்கப்பட்டு 65 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று வரை 4,320 மெகாவாட் மட்டுமே அனல் மின்சார உற்பத்தித் திறன் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் வெறும் 1,800 மெகாவாட் அளவுக்கு மட்டுமே அனல் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிலும் கூட இன்று காலை நிலவரப்படி 3,412 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையான 16,000 மெகாவாட்டில் மத்திய அரசு நிறுவனங்களிடமிருந்து 6,166 மெகாவாட், தனியார் நிறுவனங்களிடம் இருந்து 5,032 மெகாவாட் அளவுக்கும் மின்சாரத்தை வாங்கித் தான் நிலைமை சமாளிக்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், மின்கட்டணத்தை எவ்வளவு உயர்த்தினாலும் இழப்பை தடுக்க முடியாது.
தமிழகத்தில் ரூ.46,000 கோடி செலவில் தொடங்கப்பட்ட 5,700 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின்சாரத் திட்டங்கள் 7 - 8 ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை. முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களும் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தான் செயல்பாட்டுக்கு வந்தன.
வெளிநாடுகளில் 1,000 மெகாவாட் வரையிலான அனல் மின்திட்டங்கள் 51 மாதங்களில் நிறைவேற்றி முடிக்கப்படுகின்றன. தமிழகத்திலும் அதேவேகத்தில் மின்திட்டங்கள் செயல்படுத்தி முடிக்கப்பட்டால், திட்டச் செலவும், மின்சார உற்பத்திச் செலவும் கணிசமாகக் குறையும்.
அத்தகையச் சூழலில் இன்னும் குறைவான செலவில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க முடியும். எனவே, மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கும் திட்டத்தை கைவிட்டு, மின்னுற்பத்தித் திட்டங்களை விரைவாக செயல்படுத்தி, மின்சார உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT