Published : 18 Aug 2021 02:04 PM
Last Updated : 18 Aug 2021 02:04 PM
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நீட் எதிர்ப்புப் போராளி அனிதாவின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த இரண்டு நாட்களாக பட்ஜெட் அறிவிப்பு மீதான விவாதம், கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஆக. 18) மூன்றாவது நாளாக சட்டப்பேரவை கூடி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாகப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
’’ திமுக ஆட்சியில் தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டு முறையாக வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை அதிமுக ஆட்சியில் பலருக்கு நீக்கப்பட்டுள்ளது. வீடிருந்தும் வருவாயின்றி, பிள்ளைகள் இருந்தும் கைவிடப்பட்ட நிலையில் தவிக்கும் முதியோர்களுக்கு மீண்டும் முதியோர் உதவி தொகையை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
நீட் தேர்வு ரத்து
தமிழ்நாட்டின் தலையாய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது நீட் தேர்வு. தங்கை அனிதாவில் தொடங்கி 14 மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்டனர். திமுக அரசில் நீட் ஒழிப்பின் முதல்படியாக ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கருத்துக்கேட்புக் குழு ஒன்றை நியமித்து, அந்தக் குழு தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளது.
இப்படி பணிகள் சென்று கொண்டிருக்கும்போதே, நீட் தேர்வு ஏன் ரத்து செய்யவில்லை என்ற கேள்விகள் வருகின்றன. நீட் தேர்வு என்பது தமிழ்நாட்டின் அனைத்து தரப்பையும் பாதிக்கிறது. இதில் கட்சி பேதமெல்லாம் கிடையாது. எனவே, நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீட் தேர்வை ரத்து செய்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வு ரத்து என்பதை ஓர் இயக்கமாக முன்னெடுக்க வேண்டும்.
இரண்டு கோரிக்கைகள்
நீட் ஒழிப்புப் போராளி அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சூட்ட வேண்டும் என்று தங்கை அனிதாவின் சகோதரர் மணிரத்னம் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட. இக்கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றித் தருவார் என நம்புகிறேன்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்தவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்.’’.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் தனது தொகுதிக்கான கோரிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:
'' • எனது தொகுதியில் உள்ள கொய்யாத்தோப்பு, காக்ஸ் காலனி, நாவலர் நெடுஞ்செழியன் நகர், சிந்தாதிரிப்பேட்டை ஆகிய நான்கு குடிசை மாற்றுவாரியக் குடியிருப்புகள் பழமையானதாகிவிட்ட காரணத்தால், அவற்றிற்கு பதிலாக புதிய குடியிருப்புகளைக் கட்டித்தர வேண்டும்.
• இந்த நான்கு குடிசைமாற்று குடியிருப்பு வீடுகளுக்கும் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களைச் சூட்ட வேண்டும்.
• எங்கள் தொகுதியில் அயோத்திக்குப்பம், நடுக்குப்பம், மாட்டாங்குப்பம் போன்ற பின்தங்கிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள பெண்களின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில், பெண்களுக்காக, பெண்களே இயக்கும் பிரத்யேக கூட்டுறவுக் கடன் சங்கங்களை உருவாக்க வேண்டும்.
• சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தி மேலும் அழகுபடுத்த வேண்டும்.
• எங்கள் தொகுதியில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள சென்னை பள்ளிகள், அரசுப் பள்ளிகள் பல உள்ளன. அவற்றில் பல பள்ளிகளின் கட்டிடங்கள் பழுதடைந்து உள்ளன. அவற்றைச் சீரமைத்துத் தர வேண்டும்.
• என் தொகுதியிலுள்ள கழிவுநீர்க் குழாய்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதிருந்த மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டு அமைக்கப்பட்டவை. அதனால் அடிக்கடி, கழிவுநீர்க் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இப்போதுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப அவற்றை மாற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT