Published : 18 Aug 2021 01:34 PM
Last Updated : 18 Aug 2021 01:34 PM

முதல்வரின் உழைப்பில், பொறுப்புணர்வில் 1% இருந்தால் மிகச்சிறந்த எம்எல்ஏவாகி விடுவேன்: உதயநிதி கன்னிப்பேச்சு

சென்னை

முதல்வர் ஸ்டாலினின் உழைப்பில், அவரின் பொறுப்புணர்வில் 1% பெற்றுவிட்டால்கூட போதும், நான் மிகச்சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராகி விடுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனது கன்னிப் பேச்சின்போது தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கடந்த இரண்டு நாட்களாக பட்ஜெட் அறிவிப்பு மீதான விவாதம், கலைவாணர் அரங்கில் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் இன்று (ஆக. 18) மூன்றாவது நாளாக சட்டப்பேரவை கூடி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாகப் பேசினார்.

தனது கன்னிப் பேச்சில் அவர் கூறியதாவது:

* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்திருந்தால் என்றோ ஆட்சி அமைத்திருந்திருக்கலாம். ஆனால், ஜனநாயக வழியில் மக்களைச் சந்தித்துத்தான் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பொறுமை காத்தார்.

*முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்தபோது, அண்ணா நினைவிடத்துக்கு அருகாமையில் தன்னுடைய நினைவிடமும் அமைய வேண்டும் என்ற கருணாநிதியின் கடைசி ஆசையை நிறைவேற்ற விடாமல்கூட கடந்த அதிமுக அரசு முட்டுக்கட்டை போட்டது. அப்போதிருந்த அந்த அசாதாரண சூழ்நிலையை அருகில் இருந்த பார்த்த லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன்.

*நம்முடைய திமுக தலைவர் அப்போது ஒரு சிறு கண்ணசைவைக் காட்டியிருந்தால்கூட, அன்று நிலைமை வேறு மாதிரி அமைந்திருக்கும். ஆனால், அவர்பொறுப்புமிக்க அரசியல் தலைவராக சட்டப்போராட்டம் நடத்தி, கருணாநிதியின் கடைசி விருப்பம், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை நிலைநாட்டினார்.

*நம் முதல்வர் கடைக்கோடியில் இருக்கிற மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றாலும் சரி, ஒட்டுமொத்த மாநிலத்துக்கே ஒரு பிரச்சினை என்றாலும் சரி, அதற்காகக் குரல் கொடுத்து அந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு வருகிறார்.

*என் தொகுதியில் எனக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமன்றி, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து உழைக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார்.

*முதல்வர் ஸ்டாலினின் பொறுமையும் பொறுப்புணர்ச்சியும் உழைப்புமே அவரை இந்த இடத்துக்கு அழைத்து வந்திருக்கின்றன. அவரின் உழைப்பில், அவரின் பொறுப்புணர்வில் 1% பெற்றுவிட்டால்கூட போதும், நான் மிகச்சிறந்த சட்டப்பேரவை உறுப்பினராகிவிடுவேன்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x