Published : 18 Aug 2021 01:31 PM
Last Updated : 18 Aug 2021 01:31 PM
சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது என கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் சட்டவிரோத கட்டுமானத்தை உடனடியாக இடிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த டி.விஜயபாரதி என்பவர், தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அலுவலக வளாகத்தில் சட்டவிரோத கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டு வருவதாகவும், மாநகராட்சி அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசு நிலத்தில் தனிநபர்கள் கட்டுமானங்களை உருவாக்குவது சட்டவிரோதம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பாக கடந்த ஜூலை 9 ஆம் தேதி சென்னை மாநகராட்சி ஆணையர், 15-வது மண்டல அதிகாரிகள் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் கூறியுள்ளார். தனது மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து சட்டவிரோத கட்டிடத்தை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று (ஆக. 18) விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில் தனது அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கத்தை கட்டுவதற்கு தொகுதி எம்எல்ஏ கோரிக்கை வைத்ததாகவும், அதை பொதுப்பணித்துறை செய்து கொடுக்காததால், எம்எல்ஏ-வே சொந்த செலவில் கூட்ட அரங்கை கட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதை மறுத்த நீதிபதிகள், தீவிரமான அராஜக செயலுக்கான முகாந்திரம் இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். எவ்வளவு உன்னதமான நோக்கமாக இருந்தாலும், அரசு துறைகள் கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதற்காக, சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது எனவும் தெரிவித்தனர்.
அரசு நிலத்தில் தனிநபரால் கட்டப்பட்டு வரும் கட்டுமானத்தை இடிப்பதற்கு தேவையான தகுந்த உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வேறு காரணங்களுக்காக அந்த இடம் பயன்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறித்தியுள்ளனர். சட்டவிரோத கட்டுமானத்தின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT