Last Updated : 17 Aug, 2021 05:16 PM

 

Published : 17 Aug 2021 05:16 PM
Last Updated : 17 Aug 2021 05:16 PM

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் ஆணையரை உடனே மாற்ற வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்

புதுச்சேரி

உள்ளாட்சி தேர்தல் ஆணையரை உடனே மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி அதிமுக வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று (ஆக. 17) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கடந்த கால திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நடத்தப்பட வேண்டிய உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் காங்கிரஸ் கட்சி அதை கிடப்பில்பேட்டது. இது சம்பந்தமாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை அத்துறை அதிகாரிகள் செய்து வரும் போது காங்கிரஸ் கட்சி மறு சீரமைப்பில் உள்ள குளறுபடிகளை முதல்வர் சரி செய்து விட்டு தேர்தல் நடத்தவேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளது. உள்ளாட்சி மறு சீரமைப்புப்படி புதுச்சேரி, காரைக்கால் மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படவில்லை. ஒரு சட்டப்பேரவை தொகுதியான ஏனாமில் 14 வார்டுகளும், மாஹேயில் 10 வார்டுகளும் பிரிக்கப்பட்டுள்ளன.

ஆனால், ஆறு சட்டப்பேரவை தொகுதியுள்ள புதுச்சேரி நகராட்சியில் 42 வார்டுகள், 33 ஆக குறைக்கப்பட்டுளது. வார்டுகள் பிரிக்கும் போது அது குறிப்பிட்ட சட்டப்பேரவை தொகுதிக்குள் உள்ளடங்கியதாக இருக்கவேண்டும். தற்போது பல வார்டுகள் இரண்டு, மூன்று சட்டப்பேரவை தொகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. இதனால் நிர்வாக குழப்பங்கள் தான் அதிகம் வரும். அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி நகராட்சி, உழவர்கரை நகராட்சி இணைத்து மாநகராட்சி அமைத்து மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறலாமென்ற அதிமுக கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் ஒரு கொம்யூன் பஞ்சாயத்துக்கு 15-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ள நிலையில் சிறிய மாவட்டமான காரைக்காலில் 5 கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் 3 மற்றும் 4 வார்டுகள் என பிரிக்கப்பட்டுள்ளது. வார்டு மறு சீரமைப்பில் ஏற்பட்டுள்ள அத்தனை குளறுபடிகளுக்கும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி தான் காரணமாகும்.

தற்போது காங்கிரஸ் தலைமைக்கு திடீரென ஞானோதயம் வந்தது போன்று உள்ளாட்சி மறு சீரமைப்பில் உள்ள குளறுபடிகளை முதல்வர் ரங்கசாமி தீர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. உள்ளாட்சி வார்டு மறு சீரமைப்பில் உள்ள குளறுபடிகள் தீர்க்கப்பட வேண்டியதுதான், இவ்வளவு குளறுபடிகளை ஏற்படுத்திய காங்கிஸ் கட்சிக்கு அதை கூறும் தகுதி இல்லை. உள்ளாட்சி தேர்தலில் தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவிடாமல் காங்கிரஸ் முயற்சி செய்கிறது.

வார்டு மறு சீரமைப்பு முந்தைய காங்கிரஸ்-திமுக செய்துள்ள குளறுபடிகளை உச்சநீதிமன்றத்தில் எடுத்துக் கூறி தேர்தல் நடத்த கால அவகாசம் கேட்டு மறு சீரமைப்பில் செய்யப்பட்டுள்ள குளறுபடிகளை முதல்வர் சரிசெய்யவேண்டும். அதற்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் ஆணையரை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும்.’’இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x