Published : 17 Aug 2021 04:30 PM
Last Updated : 17 Aug 2021 04:30 PM
இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 6 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கடலூரைச் சேர்ந்த கே.எஸ்.குருமூர்த்தி மற்றும் அர்ஜுனன் இளையராஜா ஆகியோர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள் இருந்தாலும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களை முறைப்படுத்த அரசு எவ்வித அக்கறையையும் காட்டாத நிலையில், இந்துக்கள் வழிபடும் கோயில்களைக் கட்டுப்படுத்த மட்டும் அறநிலையத்துறை சட்டத்தைக் கொண்டுவந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்து கோயில்களை முறைப்படுத்துவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் அறநிலையத்துறை சட்டம் கொண்டுவந்த நோக்கம் மாறி, கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயில் இருந்தாலும், கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதும், நிதி முறைகேடு நடப்பதும், தவறாகப் பயன்படுத்தப்படுவதும் தொடர்கதையாக இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதச் சார்பற்ற நாடு என்று சொல்லுகின்ற நிலையில், இந்து சமயக் கோயில்களின் மீது மட்டும் ஆதிக்கம் செலுத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அறநிலையத்துறை சட்டத்தின் மூலம் கோயில்களை நிர்வகிப்பதில் எவ்விதத் தடையும் இல்லை என்றும், ஆனால், கோயில்களை முழுமையாகக் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது என்பது அனுமதிக்க முடியாது என்றும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று (ஆக. 17) விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.பாஸ்கர், அரசுத் தரப்பில் பி.முத்துக்குமார் ஆகியோர் ஆஜரானார்கள். பின்னர் நீதிபதிகள், வழக்கு குறித்த ஆவணங்களை அரசுத் தரப்புக்கு வழங்க மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்குத் தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT