Published : 20 Feb 2016 08:29 AM
Last Updated : 20 Feb 2016 08:29 AM
‘திமுக பற்றி கருத்து சொல்ல நீ யார் என, என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன்’ அழகிரியின் கருத்துகளை திமுகவினர் பொருட்படுத்த வேண்டாம் என கருணாநிதி விட்ட அம்புக்கு அழகிரி முகநூல் வழியாக விட்ட பதில் அம்பு இது.
மதுரைக்கு வந்தது ஏன்?
அழகிரியும் முன்பு சென்னைவாசிதான். 1980-ல் மதுரையில் முரசொலி பதிப்பைத் தொடங்கி, அதைக் கவனிக்கும் பொறுப்பை மகனிடம் ஒப்படைத்து அனுப்பிவைத்தார் கருணாநிதி. அவரை பொறுப்புள்ள மனிதராக வார்த்தெடுக்கும் பொறுப்பை அப்போதைய மதுரை மாவட்டச் செயலாளர் பொன்.முத்து ராமலிங்கத்திடம் ஒப்படைத்தார்.
மதுரையை அடுத்த திருநகரில் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு தனது ‘லாம்ப்ரெட்டா’ ஸ்கூட்டரில் முரசொலி அலுவலகத்துக்கு சென்று வந்து கொண்டிருந்த அழகிரி மீண்டும் சென்னைக்கே வந்தார். 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் மதுரைக்கு வழியனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் கட்சி நடவடிக்கைகளில் கொஞ்சம் கொஞ்சமாக மூக்கை நுழைக்க ஆரம்பித்தார்.
அதிகாரம் செலுத்தினார்
இந்நிலையில் 1989-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆட்சி அதிகாரத்திலும் அழகிரியின் தலையீடுகள் ஆரம்பித்தன. சொன்னது சொன்னவுடன் நடக்க வேண்டும் என்பதில் பிடிவாதம் காட்ட ஆரம்பித்தார். அவரது உயர்வுக்கும் இப்போதைய வீழ்ச்சிக்கும் இந்த பிடிவாத குணமே காரணமாக அமைந்தது.
1991-ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு கட்சிக்குள் முழுமையாக குறிப்பாக தென் மாவட்டங்களில் தனக்கென ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்க முற்பட்டார் அழகிரி. கட்சிக்குள் அழகிரியின் தலையீடுகள் இல்லாமல் இருந்திருந்தால் மதிமுக என்ற கட்சியே உருவாகாமல் கூட இருந்திருக்கலாம் என்கிறார்கள் தென் மாவட்ட சீனியர் திமுக தலைவர்கள்.
தா.கிருட்டிணன்
1996-ல் திமுக ஆட்சியில் அழகிரியின் கை இன்னும் ஓங்க ஆரம்பித்தது. மார்க்சிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி திமுக-வினரால் படுகொலை செய்யப்பட்டதும் இந்த காலகட்டத்தில்தான். 1998-ல் பொட்டு சுரேஷ் போன்றவர்கள் அழகிரியை ஆக்கிரமிக்க ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் தென் மண்டலச் செயலாளராக தா.கிருட்டிணன் நியமிக்கப்படுகிறார். அவருக்கு எதிராக இராம.சிவராமனையும் தமிழ்குடிமகனையும் கொம்பு சீவினார் அழகிரி. இன்னும் சிலரை கட்சிப் பதவியில் அமர்த்த அழகிரி செய்த சிபாரிசுகளை தா.கிருட்டிணன் ஏற்கவில்லை. இதனால் இருவரும் விரோதியானார்கள்.
2003 மே 20-ல் தா.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அழகிரி மற்றும் அவரது விசுவாசிகள் 12 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பல பேர் இன்றைக்கு கோடீஸ்வரர்கள் என்பது கூடுதல் தகவல்.
அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் இதற்கு முன்பும் பலமுறை மோதல் வெடித்திருக்கிறது. அதற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் இதுவரை யாருக்கும் தெரியாது.
போட்டி வேட்பாளர்கள்
2001 சட்டமன்றத் தேர்தலின் போதும் திமுக தலைமையோடு முரண்பட்டு நின்ற அழகிரி, மதுரையில் 8 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்களை நிறுத்தினார். மதுரை மேற்கு தொகுதியில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் தோல்விக்கு அது வழிவகுத்தது.
2001 ஜூன் 30-ல் மேம்பால ஊழல் வழக்கில் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது அழகிரியும் ஸ்டாலினும் மறியலில் ஈடுபட்டு ஒன்றாகவே மதுரை சிறைக்கு சென்றார்கள். அப்போது, ’துரோகி ஒழிக’ என்று அழகிரிக்கு எதிராக முதல் முறையாக எதிர்ப்பு கோஷம் வெடித்தது.
2006 - 2011 திமுக ஆட்சியில், தனக்கு காவடி தூக்காதவர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் அளவுக்கு அழகிரிக்கு திமுக தலைமையும் இடம் கொடுத்தது.
இதனால் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திமுக புள்ளிகள் அழகிரி வீட்டையும் பொட்டு சுரேஷ் அலுவலகத்தையும் வட்டமடிக்க ஆரம்பித்தார்கள். இப்போது அழகிரியால் எதுவும் முடியாது என்று தெரிந்ததும் ஆதாயம் அடைந்த அந்த ஆதரவாளர் கூட்டமும் அடுத்த புகலிடம் தேடி புறப்பட்டுவிட்டது.
ரவுடிகளின் ஆதிக்கம்
தா.கிருட்டிணன் கொலைக்குப் பிறகு அழகிரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வளையம் தேவைப்பட்டது. அதையே சாக்காக வைத்து அல்லு சில்லு ரவுடிகள் எல்லாம் அவரைச் சுற்றி நின்று கொண்டு அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்கள். அண்ணனிடம் பெயரெடுக்க வேண்டும் என்று நினைத்தவர்களில் சிலர் மீதுதான் மதுரை நாளிதழ் அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தி 3 உயிர்களை காவு வாங்கியதாக எஃப்.ஐ.ஆர். எழுதப்பட்டது.
திருமங்கலம் தந்த பரிசு
2009 ஜனவரி 9-ல் திருமங்கலம் இடைத்தேர்தல். இந்திய தேர்தல் ஆணையமே மிரளுமளவுக்கு விஞ்ஞான ரீதியில் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்ட தேர்தல். இந்தத் தேர்தலை வென்று கொடுத்ததற்காக அழகிரியை தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் அமர்த்தினார் கருணாநிதி. அழகிரியின் அதிகாரம் தெற்கோடு நிற்கட்டும் என கணக்குப் போட்டார் அவர். துணைப் பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பதவி தனக்கு வேண்டும் என்று அடுத்த அஸ்திரத்தை எடுப்பார் என்று அவர் அப்போது நினைத்திருக்கவில்லை. மொழிப் பிரச்சினையால் மத்திய அமைச்சராகவும் அவரால் சோபிக்க முடியவில்லை.
ஸ்டாலின் பக்கம்
ஆட்சி மாறியதும் மீண்டும் பிரச்சினை வெடித்தது. தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைத் தட்டிக் கழித்த அழகிரி, தலைமைக்கும் ஸ்டாலினுக்கும் எதிராக அவ்வப்போது கொளுத்திப்போட்டார். மாவட்டச் செயலாளர்கள் சிவகங்கை பெரியகருப்பன், மதுரை தளபதி, மூர்த்தி, திண்டுக்கல் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு உள்ளிட்டவர்கள் வரிசையாக ஸ்டாலின் பக்கம் சாய்ந்தனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வைகோவுடன் சந்திப்பு போன்ற காரணங்களால் கட்சி ஒற்றுமையை குலைப்பதாக 2014 ஜனவரி 24-ல் திமுக-விலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன் பிறகும் அவரது போக்கு மாறாததால் நிரந்தரமாகவே நீக்கப்பட்டார். இப்போது ‘நான் பலமுறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும்’ என்கிறார். இதற்கு பதில் சொல்லும் திமுக-வினர் ‘‘தான் செய்த தவறுகளை கட்சிப் போர்வை போர்த்தி தப்பிக்கப் பார்க்கிறார் அழகிரி’’ என்று கூறுகின்றனர்.
இது இரண்டாவது முறை
2000-ல் மாநிலங்களவை தேர்தல் வந்தபோது தனது விசுவாசியான காவேரி மணியத்துக்காக அழகிரியும் திருச்சி சிவாவுக்கு வாய்ப்பளிக்க ஸ்டாலினும் சிபாரிசு செய்கிறார்கள். முடிவில் திருச்சி சிவாவுக்கே வாய்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து தலைமையோடு மோதிய அழகிரி, மதுரை திமுக நிர்வாகிகளை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்தார். இவர் விதித்த தடையால் 2000-ல் சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழாவுக்கு மதுரை திமுக-வினர் போகவில்லை.
இதைத்தொடர்ந்து அழகிரியையும் அவரைச் சார்ந்தவர்களையும் இடைநீக்கம் செய்தார் கருணாநிதி. இதற்கு பிறகுதான் 2001 சட்டமன்றத் தேர்தலில் போட்டி வேட்பாளர்களை நிறுத்திய அழகிரி, அடுத்து வந்த மதுரை மேயர் தேர்தலிலும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு தனது ஆட்களை சுயேச்சையாக நிறுத்தினார். அதில் 5-க்கும் மேற்பட்டவர்கள் வெற்றியும் பெற்றார்கள். திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் சமபலத்துடன் இருந்ததால் துணை மேயர் பதவியை பிடிக்க அழகிரியின் தயவு கட்சிக்கு தேவைப்பட்டது. அதையே சாக்காக வைத்து அழகிரி மீண்டும் திமுக-வில் ஐக்கியமானார். ஆனால், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டதாக எந்த அறிவிப்பும் இல்லை. அடுத்து ஒரு அசாதாரண சமயத்தில், அழகிரி மீது ஏன் நடவடிக்கை இல்லை? என்று கேட்டவர்களுக்கு ‘அழகிரிதான் திமுக-விலேயே இல்லையே’ என்று கூறி கருணாநிதி தப்பித்துக் கொள்ள இது ரொம்பவே வசதியாகிப்போனது.
இரண்டாவது முறையாக கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்த 2014 ஜனவரி 24-ல் இடைநீக்கம் செய்யப்பட்ட அழகிரி, அடுத்த சில நாட்களிலேயே நிரந்தரமாகவும் நீக்கம் செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT