Published : 17 Aug 2021 01:07 PM
Last Updated : 17 Aug 2021 01:07 PM

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் விதமாக அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி வழங்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 24 அர்ச்சகர்களுக்குப் பல்வேறு கோயில்களில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆணை பெற்ற அர்ச்சகர்கள் பணியில் இணைந்துள்ளனர்.

இதற்கிடையே சில கோயில்களில் ஏற்கெனவே பணியில் இருக்கும் அர்ச்சகர் பணியிடத்துக்குப் புதிதாக அர்ச்சகர்களை நியமித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஏற்கெனவே பணிபுரிந்தவர்கள் அப்பணியிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், அவ்வாறு எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்துச் சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது:

''அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவது குறித்து அறநிலையத்துறை அமைச்சர், ஒரு விளக்கத்தை இங்கே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதுகுறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியோடு சொல்கிறேன். நம்மை ஆளாக்கிய நம்முடைய ஈரோட்டுச் சிங்கம், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய நெஞ்சிலே தைத்த முள் இது.

அந்த முள்ளை எடுத்திட வேண்டுமென்பதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியிருந்தார். ஆனால், அது நடைமுறைக்கு வரமுடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், இப்போது அதனை நாம் நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறோம்; அதற்கான பணி ஆணைகளை வழங்கியிருக்கிறோம்.

ஆனால், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர், சமூக வலைதளங்களில், இதை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்திலே திட்டமிட்டு, சில காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். யாரையும், எந்தப் பணியிலிருந்தும் விடுவித்து இந்தப் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. அப்படி எங்கேயாவது வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஆதாரத்தோடு சொல்வார்களென்று சொன்னால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு நிச்சயமாக எடுக்கும். அதிலே எந்தவிதமான சந்தேகமும் படவேண்டிய அவசியமில்லை.

ஆகவே, வேண்டுமென்றே அதைக் கொச்சைப்படுத்தி, அரசியலுக்காகவோ அல்லது சமூக நீதியைப் பாழடிக்க வேண்டுமென்ற நோக்கத்திலோ சிலர் திட்டமிட்டுச் செய்து கொண்டிருப்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x