Published : 17 Aug 2021 12:57 PM
Last Updated : 17 Aug 2021 12:57 PM
பட்டாச்சாரியர்கள், அர்ச்சகர்கள் என யாரையும் கோயில்களில் இருந்து வெளியேற்றவில்லை என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சீர்கெட்டு சிதலமடைந்த அறநிலையத்துறையைச் சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் திட்டத்தின் கீழ், சமீபத்தில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். இதனால், சில கோயில்களில் ஏற்கெனவே இருந்த பட்டாச்சாரியர்கள், அர்ச்சகர்கள் வெளியேற்றப்பட்டதாக, சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக. 17) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
"பட்டாச்சாரியர்களையோ, அர்ச்சகர்களையோ என யாரையும் திருக்கோயில்களில் இருந்து வெளியேற்றும் எண்ணம் இல்லை. அப்படிப் புதிதாகப் பணியமரத்தப்பட்ட இடங்களில் கூட, ஏற்கெனவே வயது மூப்பினால் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களையும் தொடர்ந்து அந்த இடங்களிலேயே பணியமர்த்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்காவது ஒருவராவது எங்களைப் பணியிலிருந்து நீக்கி விட்டார்கள் என்று, யாராவது ஒருவர் பேட்டி அளித்திருக்கிறாரா? மனிதாபிமான அடிப்படையில் 70-72 வயதுள்ளவர்களையும் அவர்களுக்கு உரிய பணிகளை அந்தந்தத் திருக்கோயில்களில் வழங்க திட்டமிட்டிருக்கிறோம்.
புதிதாக 58 அர்ச்சகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்களுடைய பணி வாய்ப்பு நிறுத்தப்பட்டிருந்தால், எங்களுடைய கவனத்துக்குக் கொண்டுவந்தால், அவர்களுக்கு உடனடியாக மாற்றுப் பணி வழங்கப்படும்.
கடந்த 10 ஆண்டுகளில் அர்ச்சகர்கள் நியமனமே நடைபெறவில்லை. 10 ஆண்டுகளில் நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, யாரும் பணியில் அமர்த்தப்படவில்லை. சீர்கெட்டு சிதிலமடைந்த இந்துசமய அறநிலையத்துறையைச் சீர்படுத்த முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பொதுநல விரும்பிகள் ஆதரவு தர வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT