Published : 17 Aug 2021 11:16 AM
Last Updated : 17 Aug 2021 11:16 AM

சென்னையின் பல்வேறு பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு இலவச வைஃபை: மாநகராட்சி அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நிறுவப்பட்டுள்ள ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள பகுதிகளில் 30 நிமிடங்களுக்கு வைஃபை தொடர்பைப் பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஆக.17) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பல்வேறு விதமான திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதன் முக்கிய நோக்கம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள திட்டப் பணிகளை ஒருங்கிணைத்து நிர்வாகச் செயல்திறனை மேம்படுத்துவதே ஆகும்.

மாநகரின் முக்கிய இடங்களைக் கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை குறித்து தகவல் கருவிகள் மூலம் அறிதல், மழை பொழிதல் அளவைக் கண்டறிதல், வெள்ளப்பெருக்கு ஏற்படும் இடங்களில் நீர் அளவைக் கண்டறிதல், அவசர காலத்தில் கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொள்ளுதல், திடக்கழிவு அகற்றும் பணிகளைக் கண்காணிக்க கேமரா நிறுவுதல் மற்றும் அதன் சார்ந்த தகவல்கள் பெறப்பட்டு அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் இணையவழி சாதனங்களின் மூலம் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் 49 எண்ணிக்கையிலான ஸ்மார்ட் கம்பங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்களில் உள்ள வைஃபை தொடர்பை (smart city wifi) பொதுமக்கள் 30 நிமிடங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்கள் கைப்பேசியில் இலவச வைஃபை பெறுவதற்கு கைப்பேசி எண்ணைப் பதிவு செய்து ஓடிபி மூலம் இச்சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பொதுமக்கள் இலவச வைஃபை இணைப்பு அமைக்கப்பட்டுள்ள 49 ஸ்மார்ட் கம்பங்கள் உள்ள இடங்களை பெருநகர சென்னை மாநகராட்சியின் https://chennaicorporation.gov.in/gcc/images/WiFiSmartPol.pdf இணையதள இணைப்பைப் பயன்படுத்தித் தெரிந்துகொள்ளலாம்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x