Published : 17 Aug 2021 03:15 AM
Last Updated : 17 Aug 2021 03:15 AM

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: புகார் மீது நடவடிக்கை கோரி தோற்றவரின் கணவர் தீக்குளிக்க முயற்சி

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தீக்குளிக்க முயன்றவர் மீது தண்ணீர் ஊற்றி, அவரது முயற்சியை போலீஸார் தடுத்தனர்.

திருவள்ளூர்

பள்ளிப்பட்டு அருகே ஊராட்சித் தலைவர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு எனஅளித்த புகார் மீது நடவடிக்கையில்லை எனக் கூறி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தலில் தோல்வியை தழுவியவரின் கணவர் தீக்குளிக்க முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2019-ல் நடைபெற்ற ஊரகஉள்ளாட்சித் தேர்தலில், பள்ளிப்பட்டு அருகே உள்ள சாமந்தவாடா ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர் தனலட்சுமி.

இவர், தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 256 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட லதா ரமேஷ் 260 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், “தபால் வாக்குகளை எண்ணாததால்தான் லதா ரமேஷ் வெற்றிப்பெற்றுள்ளார். ஆகவே, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது” என தனலட்சுமியின் கணவர் மோகன் மாநில தேர்தல் ஆணையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் புகார் மனுக்களை அளித்துள்ளார்.

இச்சூழலில், தனலட்சுமியும், அவரது கணவர் மோகனும் நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்தனர். அப்போது மோகன், தான் அளித்த புகார் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, கையில்மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தன் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த திருவள்ளூர் டவுன் போலீஸார், மோகன் மீது தண்ணீர் ஊற்றி, அவரது முயற்சியைத் தடுத்தனர்.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த திருவள்ளூர் டவுன் போலீஸார், மோகனை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை ஜாமீனில் விடுவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x