Published : 16 Aug 2021 07:28 PM
Last Updated : 16 Aug 2021 07:28 PM
திருச்சி கிஆபெ விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவருக்கு கரோனா இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா ஊரடங்கு தளர்வையொட்டி கல்லூரிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் வகுப்புகள் மீண்டும் தொடங்கின.
இதையொட்டி, கல்லூரியில் உள்ள மாணவ- மாணவிகள் 600 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், முதலாமாண்டு மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், ஒருவர் வீடு திரும்பிய நிலையில், மற்றொருவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இதுதொடர்பாகக் கல்லூரி துணை முதல்வர் ஹர்சியா பேகம் கூறியதாவது:
"மருத்துவக் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு செப்டம்பரில் தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, மாணவ- மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில், கல்லூரிக்கு அனைவரும் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் கடந்த 3 நாட்களுக்கு முன்பிருந்தே கல்லூரிக்கு வரத் தொடங்கினர்.
கரோனா தொற்று இல்லாதவர்களை மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு, கரோனா தடுப்பூசி இட்டுக் கொண்டவர்கள் உட்படக் கல்லூரியில் பயிலும் மாணவ- மாணவிகள் 600 பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், முதலாமாண்டு, 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில், ஒருவர் ஊர் திரும்பிவிட மற்றொருவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இருவரும் நல்ல நிலையில் உள்ளனர்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் 2-ம் ஆண்டிலிருந்து இறுதி ஆண்டு வரை ஒவ்வொரு வகுப்பிலும் உள்ள மாணவ- மாணவிகள் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும் வகுப்பறை, செய்முறைக் கூடம், மருத்துவமனைப் பயிற்சி என வெவ்வேறு செயல்பாடுகள் கடைப்பிடிக்கப்பட உள்ளன. மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது" .
இவ்வாறு துணை முதல்வர் ஹர்சியா பேகம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT