Published : 16 Aug 2021 07:00 PM
Last Updated : 16 Aug 2021 07:00 PM
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மூலம் 5 வயதுக் குழந்தைக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டி அக்குழந்தையின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள கூத்தகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில். இவர் ஹோட்டலில் சூப்பர்வைசராகப் பணிபுரிகிறார். இவரது 5 வயது மகன் அரியவகை எலும்பு மஜ்ஜை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தையின் ஹீமோகுளோபின் எண்ணிக்கை சராசரியை விட மிகக் குறைவாக உள்ளது. ரத்த சிவப்பணுக்கள் உருவாகும் எலும்பு மஜ்ஜையில் பாதிப்பு இருப்பதால் ரத்த சிவப்பணுக்கள் உருவாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சையே நிரந்தரத் தீர்வு என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து செந்தில் கூறுகையில், ''ரத்தப் புற்றுநோயைப் போலக் கொடியது ஏ ப்ளாஸ்டிக் அனீமியா. இந்த நோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைதான் தீர்வு என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர். அந்த நோயால் எனது 5 வயது மகன் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு ஒருமுறை ரத்தம் ஏற்றுகிறோம். ஆனாலும், ரத்த அளவு குறைந்துகொண்டே போகிறது. இப்படி இருக்கும்போதே உயர் சிகிச்சை எடுப்பது நலம் என்று நம்புகிறேன். உடல் நலம் குறைந்தபின் அந்த மருத்துவ முறைகளை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்குமோ என அஞ்சுகிறேன். ஆதலால், அடுத்தகட்ட சிகிச்சை துரிதமாகக் கிடைக்க வேண்டுகோள் விடுக்கிறேன்.
எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு உடன் பிறந்தவர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். அதில் 10/10 மிகச் சரியாகப் பொருந்தும்போது எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தால் குழந்தை விரைவில் குணம்பெற்று விடுவதற்கான வாய்ப்பு 90 முதல் 95 சதவீதம் வரை உள்ளது.
பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்களின் ரத்த மாதிரிகள் முழுக்க முழுக்கப் பொருந்தாதபோது வெளியில் தானம் செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து 10/10 க்கு பொருத்தம் இருந்தால் மட்டுமே எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வார்கள். என்னுடைய ரத்த மாதிரியில் பொருத்தம் 10க்கு 6 என்றே உள்ளது. அதனால் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள 10/10 பொருந்தும் அளவுக்குக் கொடையாளர் கிடைப்பார்களா என்பதே இப்போதைய அவசர அவசியம்.
உயர் சிகிச்சைக்கும், அரசு மருத்துவக் காப்பீட்டு உதவியுடன் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் தமிழக அரசு உதவ வேண்டும்'' என்று செந்தில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT