Published : 16 Aug 2021 06:42 PM
Last Updated : 16 Aug 2021 06:42 PM
சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவில் முதல்வரும், ஆளுநரும் பங்கேற்காததால் அமைச்சர் தேசியக் கொடியேற்றினார்.
பிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரி, இந்தியாவுடன் இணைவது தொடர்பாக புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் வாக்கெடுப்பு கீழூரில் நடந்தது. வாக்கெடுப்பின் படி இந்தியாவுடன் புதுச்சேரி இணைந்தது.
வாக்கெடுப்பு நடந்த கீழூரில் புதுச்சேரி சுதந்திரப் போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகள் நினைவாக தியாகிகள் நினைவுத்தூண் மற்றும் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.
இங்கு ஆண்டுதோறும் புதுச்சேரி, இந்தியாவுடன் இணைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா ஆகஸ்ட் 16-ல் நடைபெறுகிறது.
வழக்கமாக முதல்வர் இங்கு தேசியக்கொடியை ஏற்றி காவல்துறை மரியாதையை ஏற்று தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். ஆளுநரும் இந்நிகழ்வில் பங்கேற்பார். கருத்து வேறுபாடுகளால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பங்கேற்று வந்தனர்.
தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முதல்வராக ரங்கசாமி பொறுப்பேற்றுள்ளார். ஆளுநராக தமிழிசை உள்ளார். இருவரும் இந்நிகழ்வில் இன்று காலை நடந்த விழாவில் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில் பேரவைத்தலைவர் செல்வம், இத்தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான தேனீ ஜெயக்குமார் மற்றும் தியாகிகள் காத்திருந்தனர்.
ஆனால் முதல்வர் வராததால் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் தேசியக் கொடியேற்றினார். பின்னர் தியாகிகளை கவுரவித்தார். நினைவுத்தூணுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி போலீஸாரின் மரியாதை ஏற்றுக்கொண்டு புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார்.
ஆளுநர் தமிழிசையும் இவ்விழாவில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அங்கு வந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை அதிகாரிகள் விழா நிகழ்வில் பங்கேற்க அழைத்தனர். கொடி ஏற்றப்பட்டதை அறிந்து அங்கு வரவில்லை. அருகே நடந்த ஆதரவாளர் நிகழ்வில் பங்கேற்று விட்டு புறப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT