Last Updated : 16 Aug, 2021 04:48 PM

 

Published : 16 Aug 2021 04:48 PM
Last Updated : 16 Aug 2021 04:48 PM

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் விபத்தில் பலி: தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது நேர்ந்த பரிதாபம்

ஆறுமுகம் | கோப்புப் படம்.

ஜோலார்பேட்டை

வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (52). தெக்குப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோகிலா (45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆறுமுகம் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது ரயில் மூலம் கோவைக்குச் சென்று மருத்துவப் பரிசோதனையும் செய்து வந்தார்.

தனது கிராமத்தில் இருந்து வாணியம்பாடி ரயில் நிலையம் வர சிரமம் ஏற்பட்டதால், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில் உள்ள தனது சகோதரி வசந்தி வீட்டில் தங்கியபடி, ஆறுமுகம் கோவைக்குச் சென்று மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, கோவைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக ரயில் மூலம் செல்ல ஆறுமுகம் வாணியம்பாடி ரயில் நிலையத்துக்கு இன்று (ஆக.16) பகல் 1.30 மணியளவில் வந்தார். தனது இருசக்கர வாகனத்தை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, தண்டவாளம் வழியாக 2-வது நடைமேடையை நோக்கி ஆறுமுகம் சென்றார்.

2-வது நடைமேடையை அடைய அங்குள்ள தண்டவாளத்தை ஆறுமுகம் அவசர, அவசரமாகக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த விரைவு ரயில் அவர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட தலைமை ஆசிரியர் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஜோலார்பேட்டை ரயில்வே உதவி காவல் ஆய்வாளர் முரளி மனோகரன் மற்றும் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆறுமுகம் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் அடிபட்டு தலைமை ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x