Published : 16 Aug 2021 04:20 PM
Last Updated : 16 Aug 2021 04:20 PM

செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தனி அமைப்பாகச் செயல்பட நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சர் தங்கம் தென்னரசு: கோப்புப்படம்

சென்னை

செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தனி அமைப்பாகச் செயல்பட, பெரும்பாக்கத்தில் கட்டுமானம் நடைபெற்று வருவதாகவும், அதை முதல்வர் விரைவில் திறந்துவைப்பார் என்றும் தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 14-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மே. 16) பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது, மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் குறிப்பு வாசித்தார். பின், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், ஸ்டேன் சுவாமி, இளங்குமரனார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து, பட்ஜெட் மீதான பொது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன், செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல உள்ளதாகவும், அதனைத் தமிழகத்திலேயே இருக்கச் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, ''மத்திய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டபோது மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படும் என மத்திய அரசு கூறியது. அதனை முதல்வர் ஸ்டாலின் ஆரம்பக் கட்டத்திலேயே எதிர்த்தார். செம்மொழித் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தனி அமைப்பாகச் செயல்பட, பெரும்பாக்கத்தில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. அதனை முதல்வர் விரைவில் திறந்துவைப்பார்'' என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய பாவேந்தர் நூலகமும் அங்கு செயல்படும் எனவும், அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x