Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM
மகப்பேறு சிகிச்சையை அரசு மருத்துவக் காப்பீட்டில் இணைப்பதோடு, திருமண முன் பணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58 ஆக குறைப்பது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் முக்கியக் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புநிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. அகவிலைப்படி உயர்வு அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போன நிலையில், மகப்பேறு கால விடுப்பு 3 மாதம் அதிகரிப்பு, பணியில் இருக்கும் போது இறக்கும் அரசு ஊழியரின் குடும்ப நல நிதி உயர்வு ஆகியவை மட்டுமே அரசு ஊழியர்களுக்கான சலுகை அறிவிப்பாக வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே வெள்ளை அறிக்கை மூலம் அரசின் நிதிநிலை மிக மோசமாக உள்ளது என அரசு வெளிப்படுத்திய நிலையில், அரசுக்கு செலவில்லாத சில கோரிக்கைகளையாவது பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறியதாவது:
அரசு ஊழியர்களின் பிரதான கோரிக்கைகளை தற்போது நிறைவேற்ற முடியாத நிலையில், ஊழியர்களின் நலனுக்காக, கடந்த காலங்களில் பிறக்கப்பட்ட சில அரசாணைகளில் மாற்றம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 1995-ம் ஆண்டு அரசாணைப்படி, அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வியாக பொறியியல் படித்தால் ரூ.2500, கலை அறிவியல் படித்தால் ரூ.2000, தொழில்கல்வி பயின்றால் ரூ.1000 முன்பணமாக வழங்கப்படுகிறது.
தற்போது, கல்லூரி விண்ணப்பம் வாங்கி வருவதற்கே இந்த தொகை போதாது என்ற நிலையில், இந்த முன்பணத்தொகையை குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும்.
அதேபோல், அரசு ஊழியரின் மகள் திருமணத்திற்கு ரூ.10 ஆயிரம், மகன் திருமணத்திற்கு ரூ.6000 மட்டுமே முன்பணமாக பெற முடியும். இதனை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். முன்பணமாக நாங்கள் பெறும் தொகையை, அரசுக்கு ஒவ்வொரு மாதமும் நாங்கள் திருப்பிச் செலுத்தி விடுவதால், எவ்வித நிதியிழப்பும் ஏற்படாது.
அரசு ஊழியர்களின் மருத்துவச் செலவுக்காக சம்பளத்தில் இருந்து மாதம் ரூ.300 வீதம் பிடித்தம்செய்யப்பட்டு அவர்களின் மருத்துவச் செலவுகளுக்கான தொகை வழங்கப்படுகிறது.
சிகிச்சை பெறும் பட்டியலில், கர்ப்பப்பை அகற்றும் அறுவைச்சிகிச்சை இடம்பெற்றுள்ளது. ஆனால், அரசு ஊழியரின் பிரசவச் செலவுக்கு அரசு மருத்துவக் காப்பீடு உதவித்தொகை கிடைப்பதில்லை.
அதேபோல், மகப்பேறு இன்மைக்கான சிகிச்சைக்கும் அரசின் உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. எனவே, பிரசவம் மற்றும் மகப்பேறு இன்மைக்கான சிகிச்சையையும் காப்பீடு பெறுவதற்கான பட்டியலில் அரசு இணைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT