Published : 15 Aug 2021 07:07 PM
Last Updated : 15 Aug 2021 07:07 PM
தமிழகத்தைவிட புதுச்சேரியில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதை அரசுக்கு உணர்த்தும் வகையில் காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸார், பொதுமக்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கி தங்களது நூதன எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நாடு முழுவதும் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனிடையே பெட்ரோல் விலை ரூ.3 குறைத்து பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.
இது உடனடியாக அமலுக்கு வந்த நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெட்ரோல் விலை குறைவாக விற்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் பெட்ரோல் விலை ரூ.100-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இதனை புதுச்சேரி அரசுக்கு உணர்த்தும் வகையில் இன்று (ஆக. 15) காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸார்
ரெயின்போ நகர் சந்திப்பில் பொதுமக்கள் 200 பேருக்கு தலா 1 லிட்டர் பாட்டிலில் இலவசமாக பெட்ரோல் வழங்கி, பெட்ரோல் விலை உயர்வுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு எம்.பி வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். வினோத் முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இலவசமாக பெட்ரோல் விநியோகிக்கப்பட்ட நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி முண்டியடித்து அவற்றை வாங்கிச் சென்றனர்.
கடந்த காலங்களில் தமிழத்தில் இருந்து புதச்சேரி வந்து பெட்ரோல், டீசலை வாகனங்களில் நிரப்பிச் செல்வார்கள். ஆனால் தற்போது புதுச்சேரியின் நிலை தலைகீழாக மாறியுள்ளது எனவும் காங்கிரஸார், பொதுமக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT