Last Updated : 15 Aug, 2021 03:34 PM

 

Published : 15 Aug 2021 03:34 PM
Last Updated : 15 Aug 2021 03:34 PM

கரோனா மையத்தில் 14 வாரங்களாக இசை நிகழ்ச்சி: மன அழுத்தம் போக்கிய கலைஞருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 75 வது சுதந்திர தின விழாவில் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி சேவை புரிந்தவர்களில் ஒருவரான இசைக்கலைஞர் பிராங்கிளின் என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். =

தஞ்சாவூர்

தஞ்சாவூர் கரோனா சிகிச்சை மையத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை ஊக்கப்படுத்த தொடர்ந்து 14 வாரங்களாக இசைநிகழ்ச்சியை நடத்திய இசைக்கலைஞருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாவது அலையின் போது நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் கரோனா சிகிச்சை மையம் மாவட்ட நிர்வாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கரோனா உச்ச கட்டத்தில் இருந்தபோது, ஊரடங்கும் அமல்படுத்தப்பட்ட நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மனதளவில் சோர்ந்து போய் இருந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் அனுமதியோடு, தஞ்சாவூர் டிஎபிஎஸ் நகரைச் சேர்ந்த இசைக்கலைஞரான பிரான்ங்கிளின் (45) என்பவர் தாமே முன்வந்து, சிகிச்சை மையத்துக்குள் துணிந்து சென்று, எவ்வித பிரதிபலனும் பாராமல் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.

இந்த நிகழ்ச்சி அங்கு சிகிச்சையில் இருந்தவர்களுக்கு பெரும் உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளித்தது. இதையடுத்து தொடர்ந்து வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு தொடங்கி மூன்று மணி நேரம் தனி ஆளாக நின்று இசை நிகழ்ச்சியை 14 வாரங்களாக நடத்தி, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மன இறுக்கத்தைப் போக்கினார். அப்போது சிகிச்சை பெற்றவர்களில் சிலர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு நடனங்களையும் ஆடி பலரையும் ஊக்கப்படுத்தினர்.

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று 75-வது சுதந்திரதின விழாவில், கரோனா காலத்தில் சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் நற்சான்றிதழ் விருது வழங்கப்பட்ட போது, இசைக்கலைஞர் பிராங்கிளின் சேவையைப் பாராட்டி அவருக்கு நற்சான்றிதழ் விருதை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பாராட்டி சிறப்பித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x