Published : 15 Aug 2021 01:57 PM
Last Updated : 15 Aug 2021 01:57 PM
கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று நள்ளிரவு நகைகள், திருடுவதற்காக மர்ம நபர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவன நாதர் சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த பூமிதேவி - நீலாதேவி சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நேற்று இரவு 8 மணிக்கு பூஜைகள் முடித்து அர்ச்சகர் வரதராஜன் மற்றும் பணியாளர்கள் கோயில் நடை சாத்தி விட்டு வீட்டுக்கு சென்றனர்.
இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் கோயிலில் இருந்து பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. இதனால் கோயிலின் இரவுக் காவலர்கள் மற்றும் அக்ரஹார பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து அனைவரும் கோவில் முன் திரண்டனர்.
உடனடியாக கோயில் நடை திறக்கப்பட்டு பணியாளர்கள் சென்று பார்த்தனர். அப்போது மூலவர் சன்னதியின் இரண்டு கதவுகளின் பூட்டுகளும் அடைக்கப்பட்டு இருந்தன. வலது பின்புற பிரகாரத்தில் உள்ள சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு மேல் பகுதியில் கயிறு ஒன்று கிடந்தது. அதனுடன் ஒரு கடப்பாரை, ஸ்க்ரூ டிரைவர் ஆகியவையும் கிடந்தன.
தகவல் அறிந்து இன்று காலை கிழக்கு காவல் நிலைய போலீஸார் கோயிலுக்கு வந்து பார்வையிட்டனர். இதில் மர்ம நபர்கள் கோயிலின் பின்புறம் உள்ள பகுதி வழியாக கயிறு கட்டி மேலே ஏறி, உள்ளுக்குள் நுழைந்துள்ளனர். அலாரம் ஒலித்ததால் அவர்கள் மீண்டும் அதே வழியாக தப்பியதும் தெரியவந்தது. இதில் 3 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
தடய அறிவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயில் மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் போலீஸார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT