Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM

100 நாட்களில் எண்ணற்ற சாதனைகள்- முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு அரசியல் கட்சிகள் பாராட்டு

சென்னை

நூறு நாட்களில் எண்ணற்ற சாதனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்துள்ளதாக திமுக கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி, பாஜக, பாமக கட்சியினரும் பாராட்டினர்.

சட்டப்பேரவையில் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் நேற்றுதாக்கல் செய்யப்பட்டது. பிறகு, தமிழக அரசின் 100 நாள் சாதனைகுறித்து கட்சித் தலைவர்கள் பேசினர்.

பேரவைத் தலைவர்அப்பாவு: முதல்வரின் உழைப்பு அளவிட முடியாதது. ஏழை மக்களை மட்டுமே சிந்தித்து, தினமும் 2, 3 மணி நேரம் மட்டுமே உறங்குகிறார்.

அவை முன்னவர் துரைமுருகன்: தோழமைக் கட்சியினர் மட்டுமின்றி, எதிர் திசையில் உள்ள பாஜகவினரும் நல்ல இதயம் இருப்பதால் திமுக அரசைப் பாராட்டியுள்ளனர். தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகுஸ்டாலின் கட்சித் தலைமையேற்று,ராஜ தந்திரங்களைக் கையாண்டு, தோழமை அமைத்து மாபெரும்வெற்றி பெற்றுள்ளார். கரோனாவை எதிர்த்து போராடி வருகிறார். பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக வேளாண்மைக்குஎன்று தனி பட்ஜெட் சமர்ப்பித்ததுடன், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புரட்சியை செய்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் திராவிட இயக்க வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): புதிய எழுச்சியாக இந்த ஆட்சி உள்ளது. முதல்வர், அமைச்சர்களை நாடு போற்றுகிறது. கரோனா நிவாரணம் வழங்கியதன் மூலம் மத்திய அரசுக்கே முதல்வர் வழிகாட்டியாக உள்ளார்.

எம்.ஆர்.காந்தி (பாஜக): முதல்முறையாக வேளாண் பட்ஜெட் வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தின நிகழ்ச்சியில் ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

தளி டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): 100 நாட்கள் ஆட்சிவிடியலின் ஒளிக்கீற்றாக அமைந்துள்ளது. நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் `நம்பர் ஒன்' முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார்.

நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): திருச்சி - நாகைபகுதிகளை வேளாண் பெருந்தொழில் தடமாக அறிவித்ததற்காக நன்றி தெரிவிக்கிறோம்.

ஜி.கே.மணி (பாமக): வேளாண் பட்ஜெட் தொடர்பான பாமகவின் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சிந்தனைச்செல்வன் (விசிக):100 நாட்கள் என்பது நம்பிக்கை தரும் வரலாறாக மாறியுள்ளது. ஜனநாயக பண்பு மிகுந்த முதல்வர்கிடைத்துள்ளது, தமிழகத்துக்கே நம்பிக்கை அளிக்கிறது.

சதன் திருமலைக்குமார் (மதிமுக): விவசாயிகளின் கண்ணீரை துடைக்க அதிக திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, மக்களைக் தேடி மருத்துவம் திட்டம் பாராட்டுக்குரியது.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி): 100 நாட்களில் எண்ணற்ற சாதனைகளை அரசு செய்துள்ளது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு, அகில இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தியது ஆகியவற்றுக்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கறோம்.

எம்.ஹெச். ஜவாஹிருல்லா (மமக): சிறப்பான முறையில் நடைபெறும் இந்த ஆட்சி பல்லாண்டு தொடரட்டும்.

ஈ.ஆர். ஈஸ்வரன் (கொமதேக):தமிழகம் விடியலை நோக்கி பயணித்துவிட்டதை பட்ஜெட் மூலம் அறிய முடிகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x