Last Updated : 10 Feb, 2016 05:52 AM

 

Published : 10 Feb 2016 05:52 AM
Last Updated : 10 Feb 2016 05:52 AM

பத்திரப் பதிவு முறைகேட்டைத் தடுக்க நவீன முறை விரைவில் அறிமுகம்

ஒரே சொத்தினை வெவ்வேறு அலுவலகங்களில் பத்திரம் பதிவு செய்வதைத் தடுக்க பத்திரப் பதிவுத் துறை விரைவில் நவீன முறையை அறிமுகம் செய்யவுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவைப் பொறுத்தவரை இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் எந்த ஊருக்கும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அவ்வாறு டிக்கெட் எடுக்கும்போது முன்பதிவு டிக்கெட் டுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் வகையில் ரயில்வே துறையின் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

அதுபோல எந்த ஊரில் உள்ள சொத்தையும் எந்த ஊரிலும் பத் திரப் பதிவு செய்யும் வசதி தற் போது உள்ளது. அதனால், ஒரு சொத்தினை வெவ்வேறு இடங் களில் விற்கும் முறைகேடான சில சம்பவங்களும் நடக்கின்றன. இதைத் தடுக்க பத்திரப் பதிவுத் துறை நவீன முறையை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கான மென் பொருள் தயாரிக்கும் பணி நிறை வடையும் நிலையில் உள்ளது. நவீனமுறை அறிமுகம் செய்யப் பட்டதும், ஒரு சொத்து ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டதும், தானியங்கி முறையில் உடனுக்குடன் பதிவேற் றம் செய்யப்படும். அதனால் அதே சொத்துக்கு வேறொரு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்ய முடியாது.

பத்திரம் பதியும்போது தாய் அல்லது மூலப் பத்திரம் இருந் தால்தானே பதிவு செய்ய முடியும். அப்படி இருக்கும்போது வெவ் வேறு இடங்களில் பத்திரம் பதிவு செய்வது எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி சிலருக்கு எழும். அரசு புறம்போக்கு நிலங்களுக்கு தாய் பத்திரம் வழங்கப்படுவ தில்லை. ஒருவரிடம் உள்ள 10 ஏக் கர் நிலத்தில் இரண்டு ஏக்கரை மட்டும் அவர் விற்கலாம். அப் போது தாய் பத்திரத்தை அவர் தருவதில்லை. அந்த நிலத்தை கடைசியாக வாங்குபவருக்கே தாய் பத்திரம் கிடைக்கும். இது போன்ற இடங்களை வெவ்வேறு இடங்களில் பதிவு செய்து முறை கேடு செய்யும் அபாயம் உள்ளது.

தற்போது சார் பதிவாளர் அலு வலகங்களில் பதிவு செய்யப்படும் சொத்துகள் பற்றிய விவரங்கள் அனைத்தும் அன்றைய தினம் மாலையில்தான் கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், புதிய முறையில் தானி யங்கி முறையில் உடனுக்குடன் பதிவேற்றப்படும். அதனால் ஏற்கெனவே பத்திரப் பதிவு செய்யப்பட்ட சொத்தினை வேறு ஒரு இடத்தில் பதிவு செய்ய முடியாது. அவ்வாறு பதிவு செய்ய முற்பட்டால், அந்த சொத்து ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுவிட்டது என்ற தகவல் சமிக்ஞை மூலம் தெரிய வருவதுடன், சம்பந்தப்பட்ட நபரும் பிடிபடுவார். இந்த நவீனமுறை விரைவில் அறிமுகமாகிறது.

இடம், நிலம், வீடு அல்லது குடியிருப்பு என எதனைப் பதிவு செய்தாலும் வாங்குபவரும், விற்பவரும் தற்போது நேரில் வந்து புகைப்படம் எடுக்க வேண்டும். அவர்களின் கைரேகையும் பதிவு செய்யப்படும். செல்போன் எண் களும் பெறப்படுகிறது. செல்போன் எஸ்.எம்.எஸ். மூலமாகவும் முறை கேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பத்திரப் பதிவுத் துறையின் ஆவணங்கள் அனைத்தையும் கம்ப்யூட்டர்மயமாக்கும் பணியை டிசிஎஸ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், வங்கி ஏடிஎம்-மில் பணம் எடுத்ததும் நமது செல்போனுக்கு அந்த தகவல் எஸ்.எம்.எஸ். மூலம் வருவதுபோல, நமது சொத்தினை அபகரிக்கும் நோக்கில் யாராவது பத்திரம் பதிவு செய்ய முற்பட்டால், அப்போது கைரேகை “மேட்ச்” ஆகாது.

அதையடுத்து சம்பந்தப்பட்ட சொத்து உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ்.-ல் அத்தகவல் அனுப்பப்படும். இதை வைத்து முறைகேட்டை தடுத்துவிட முடியும் என்று பத்திரப்பதிவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x