Published : 14 Aug 2021 06:08 PM
Last Updated : 14 Aug 2021 06:08 PM

தமிழக அரசின் வேளாண்மை பட்ஜெட்: தி.மு.க சொன்னது ஒன்று ; செய்திருப்பது வேறு - டிடிவி தினகரன்

தி.மு.க சொன்னது ஒன்று; செய்திருப்பது வேறு என்று வேளாண் பட்ஜெட் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “

”தி.மு.க சொன்னது ஒன்று; செய்திருப்பது வேறு வேளாண்மைக்கு தனி பட்ஜெட் என்றவுடன் தமிழகத்தில் விவசாயத்தையும், விவசாயிகளையும் உயர்த்தும் அளவுக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட மிகப்பெரிய செயல் திட்டத்தை தமிழக அரசு வெளியிடும் என்று அனைத்து தரப்பினரிடமும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு பொய்யாகி இருக்கிறது.

ஏனெனில், வழக்கமான நிதிநிலை அறிக்கையில் இருந்து சில அம்சங்களைப் பிரித்தெடுத்து பெயரளவுக்கு ஓர் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500/- ஆக உயர்த்துவோம் என்று வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தவர்கள், வெறும் 25 ரூபாய் மட்டும் அதிகப்படுத்தி, ரூ.2,015/- மட்டும் வழங்கி தமிழக விவசாயிகளை ஏமாற்றியிருக்கிறார்கள். இதுமட்டுமின்றி, விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்வதற்கான வழிமுறைகளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தால், நெல்மூட்டைகளை மூடி வைக்க தார்பாய் வாங்குவோம் என்று பட்ஜெட்டில் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதான் பிரச்னைக்கு தீர்வு காணும் வழியா? .

கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளிடம் இருந்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,200/- கோடிக்கும் அதிகமான நிலுவைத் தொகையை அவர்களுக்கு பெற்றுத் தருவது தொடர்பான அறிவிப்பு எதுவும் இடம் பெறவில்லை. அதோடின்றி கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4,000/- ஆக உயர்த்தி தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த தி.மு.க, தற்போது பெயரளவுக்கு ரூ.150/- ஊக்கத்தொகை அறிவித்து ரூ.2,900/- மட்டும் வழங்குவது போதுமானதல்ல.

100 நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை விவசாயத்திற்கும் பயன்படுத்தும் வகையில் செயல்திட்டம் வகுக்க வேண்டும் என்ற வேளாண் பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தி.மு.க அரசு கண்டுகொள்ளவில்லை.

இது போன்றே சிறு,குறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நேரடியாக பலன் தரும் அறிவிப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

தமிழக அரசின் இயற்கை விவசாயம் சார்ந்த முன்னெடுப்புகள் ஆறுதல் அளித்தாலும் அதற்கான செயல்பாடுகள் எப்படி இருக்கப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மொத்தத்தில் வேளாண்மைத்துறைக்கு தனியாக பட்ஜெட் போட்டதையே சாதனையாக கருத முடியாது . அதன்மூலம் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் பலன் கிடைக்க வேண்டியதே முக்கியம் என்பதை ஆட்சியாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x