Published : 14 Aug 2021 05:54 PM
Last Updated : 14 Aug 2021 05:54 PM
வேளாண் நிதிநிலை அறிக்கை ஒரு நல்ல தொடக்கம் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக. 14) வெளியிட்ட அறிக்கை:
"தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்த வேளாண் நிதிநிலை அறிக்கையில், வேளாண்மை மற்றும் அது சார்ந்த துறைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. புதிய திட்டங்கள் குறித்த விவாதங்கள் ஒருபுறமிருக்க பாமக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வந்ததன் பயனாக, தமிழகத்தில் வேளாண்துறைக்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதே வரவேற்கத்தக்கதாகும்.
தமிழகத்தில் 11.75 லட்சம் ஹெக்டேர் தரிசு நிலங்களை பாசன நிலங்களாக மாற்றும் நோக்கத்துடன் கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் சாகுபடி பரப்பை அதிகரிக்க இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
பனைமரங்களை பாதுகாப்பதற்காகவும், பனை தொழிலை மேம்படுத்துவதற்காகவும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது பாமகவின் கொள்கையும், நீண்ட கால கோரிக்கையுமாகும். இது செயல்வடிவம் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி.
பாமக தாக்கல் செய்து வரும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு வந்தவாறு பண்ருட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் குளிர்பதனக் கிடங்குகள், பல மாவட்டங்களில் சேமிப்புக் கிடங்குகள், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோர் பெயர்களில் புதிய அமைப்புகள், இயற்கை விவசாய வளர்ச்சிக்கு சிறப்புத் திட்டம், மின்னணு ஏலம் முறை அறிமுகம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பாமகவின் யோசனைகள் செயல்வடிவம் பெற்றிருப்பதில் பெருமிதம் அடைகிறேன்.
பாமக அதிக முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி வந்த இன்னொரு கோரிக்கை சிறுதானிய சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும் என்பதாகும். அதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், சந்தை வசதிகளை செய்து தரவும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படும் என்று வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால் விவசாயிகள் பயனடைவர்.
திருச்சி முதல் நாகப்பட்டினம் வரை வேளாண் தொழில் வழித்தடம் அமைக்கப்படும் என்பதும் பயனுள்ள அறிவிப்பு தான். நெல் கொள்முதல் விலை சாதாரண ரகத்துக்கு ரூ.2,015, சன்னரகத்துக்கு ரூ.2,060 ஆக உயர்த்தப்படும்; கரும்புக்கு ரூ.150 ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,900 ஆக உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளித்திருக்கிறது.
கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500, நெல்லுக்கு ரூ.3,000 வீதம் கொள்முதல் விலை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரி வரும் நிலையில், நெல், கரும்பு கொள்முதல் விலைகளை உயர்த்த அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யவும், நெல் கொள்முதலில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் களைய வேண்டும்.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்தது ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வேளாண்மைக்கும் நீட்டிக்கப்படுவது குறித்த அறிவிப்பு தான். ஆனால், அந்த அறிவிப்பு இடம் பெறவில்லை. ஊரக வேலை உறுதித் திட்டப்படியான பணி நாட்கள் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அத்திட்டத்தை வேளாண்மைக்கும் நீட்டிப்பது மிகவும் எளிதானது மட்டுமின்றி பயனுள்ளதாக இருக்கும். இந்த எதிர்பார்ப்பை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்.
வேளாண் துறை வளர்ச்சி, வேளாண் சாகுபடி பரப்பு அதிகரிப்பு ஆகியவை தான் முதல் வேளாண்மை நிதிநிலை அறிக்கையின் நோக்கம் ஆகும். மிக அதிக அளவில் பாசனத் திட்டங்களை செயல்படுத்தாமல், இந்த இலக்கை அடைய முடியாது. ஆனால், நீர்ப்பாசனப் பெருந்திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது.
அதேபோல், வேளாண்மை, நீர்வளம், கூட்டுறவு, ஊரகவளர்ச்சி, கால்நடைத்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, வனத்துறை, உணவுத்துறை ஆகிய 9 துறைகளை உள்ளடக்கிய வேளாண் நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பு ரூ.34,220 கோடி ஆகும். வேளாண் துறை வளர்ச்சிக்கான தேவைகளுடன் ஒப்பிடும் போது இது மிகவும் குறைவு ஆகும்.
வேளாண்மை, நீர்வளத்துறை ஆகிய இரு துறைகளுக்கு மட்டும் ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கினால் மட்டும் வேளாண் துறை ஆண்டுக்கு ஆண்டு 6 விழுக்காடு வளர்ச்சி அடைவதை உறுதி செய்ய முடியும்.
வேளாண்மை தான் தமிழகத்தின் முதன்மைத் துறை. அதன் தேவைகள் கடல் போன்றவை. அவை அனைத்தையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றி விட முடியாது. அந்த வகையில் நடப்பாண்டில் முதலாவது வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதையும், அதில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களையும் நல்ல தொடக்கமாக கருதலாம்... முடிவு பயனுள்ளதாக அமையும் என்று நம்புவோம்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT