Published : 14 Aug 2021 03:53 PM
Last Updated : 14 Aug 2021 03:53 PM
புதுச்சேரியில் பாஜக காலூன்றவே என்.ஆர்.காங்கிரஸை பயன்படுத்தி கொள்கிறார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனியட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஆக. 14) புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘‘புதுச்சேரியில் கரோனாவுக்கு முன்பு அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 71 ஆயிரம். தற்போது 80 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாததால் மாணவர்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி வருகின்றனர். ஆனால், அரசுப் பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லை, ஆசிரியர்கள் இல்லை, அடிப்படை வசதியில்லை என்ற காரணத்தைக் கூறி, கல்வித்துறை அதிகாரிகளும், சில தலைமை ஆசிரியர்களும் குழந்தைகளை சேர்க்காமல் திரும்பி அனுப்பும் அவலநிலை உள்ளது. இது ஏழை மாணவர்களுக்கு செய்யக் கூடிய மிகப்பெரிய அநீதியாகும். மேலும், தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் (டிசி) தருவதில்லை.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் இருந்து வரும் மாணவர்களிடம் மாற்றுச்சான்றிதழ் கேட்காமல் சேர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் இருந்தால்தான் சேர்ப்போம் என்று கூறுகிறார்கள். மக்களுக்கு கல்வி அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
எனவே, அரசுப் பள்ளியில் சேர வரும் ஏழை, எளிய மாணவர்களை திரும்பி அனுப்பாமல் உடனே சேர்த்துக் கொள்ள வேண்டும். மாற்றுச்சான்றிதழ் கட்டாயம் என நிர்பந்திக்கக் கூடாது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று சிபிஎம் மாவட்ட செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மதசார்ப்பின்மை தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகிறது. கூட்டாட்சிக்கு பதில் ஒற்றை ஆட்சி முறையை மோடி முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.
பெகாசஸ் மென்பொருள் மூலம் ஆயிரம் பேரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் எதிர்கட்சிகள் கோரிவரும் நிலையில் மத்திய அரசு ஏற்கவில்லை. இதனை எதிர்த்து செப்டம்பரில் நாடு முழுவதும் கண்டன இயக்கம் நடத்துவது என்றும் முடிவு செய்துள்ளோம்.
புதுச்சேரியில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு பாஜக அல்லாத மாநில அரசுகளை கவிழ்க்கிறது அல்லது சீர்குலைக்கிறது. பாஜகவை ஆதரிக்கக் கூடிய மாநில அரசாக இருந்தால் அவர்களது கையை முறுக்கி அவர்களுக்கு சாதகமாக செயல்பட வைக்கிறது. அப்படிதான் தமிழகத்திலும் செய்து கொண்டிருந்தார்கள்.
புதுச்சேரியில் ஆளுநரை பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார்கள். யூனியன் பிரதேச வரலாற்றில் எந்த கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறதோ, அக்கட்சிதான் நியமன எம்எல்ஏக்களை பரிந்துரைப்பார்கள். ஆனால், பாஜகவை சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்துள்ளார்கள்.
புதுச்சேரியில் பாஜக காலூன்றவே என்.ஆர்.காங்கிரஸை பயன்படுத்தி கொள்கிறார்கள். நாடு முழுவதும் எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் இந்துத்துவா கொள்கையை நடைமுறைப்படுத்த முடியும் என்ற அணுகுமுறையை பாஜக அரசு கடைபிடிக்கிறது. அதற்கு இரையாவது போல் என்ஆர் காங்கிரஸ் இருக்கிறது.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வந்தபிறகு கட்சியின் செயற்குழு கூடி கூட்டணியை முடிவு செய்யும். புதுச்சேரி பட்ஜெட்டில் கல்வி, பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
மத்திய தொகுப்பில் இருந்து புதுச்சேரிக்கு ஒதுக்கும் நிதியை அதிகரிக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்க வேண்டும். சிறு, குறு தொழிலை மேம்படுத்தவும் மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். புதுச்சேரியில் புதிதாக சட்டப்பேரவை கட்டுவதற்கு பதிலாக மூடிய பஞ்சாலைகளை திறந்து நடத்தினால் கணிசமான அளவுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.’’ இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
பேட்டியின் போது புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ்மாநில குழு உறுப்பினர் பெருமாள், மத்திய குழு உறுப்பினர் சுதா மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT