Published : 14 Aug 2021 03:44 PM
Last Updated : 14 Aug 2021 03:44 PM

எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என ஏமாற்ற மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என ஏமாற்ற மாட்டேன் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் (ஆக. 14) 100 நாட்கள் நிறைவடைகிறது. இதையொட்டி, சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

"100 நாட்களை கடந்தது குறித்து நீங்கள் எல்லாம் பெருமையாக பேசினீர்கள். ஆனால், எனக்கு அடுத்து வரும் காலத்தைப் பற்றிய நினைப்பாகவே இருந்து கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு எனக்கோ திமுகவுக்கோ இருந்த எதிர்பார்ப்பைவிட, இந்த 100 நாட்களில் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி இருக்கிறது. இன்னும் பணிகளை செய்ய வேண்டும் என ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்.

திமுகவுக்கு வாக்களிக்காதவர்கள் கூட இப்போது தேர்தல் நடந்தால் திமுகவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள். அந்தளவுக்கு சிறப்பான பெயரை பெற்றிருக்கிறோம். அந்த பெயரை காலமெல்லாம் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். அமைச்சர்கள், தலைவர்கள், எம்எல்ஏக்களுக்கு நன்றி.

ஆட்சிக்கு வரும்போது கரோனா சூழ்ந்திருந்தது. அதனை தடுக்க நாம் போர்க்கால முறையில் இணைந்து செயல்பட்டோம். முதல் ஒரு மாத காலம் ஆம்புலன்ஸ் சத்தம்தான். அந்த சத்தம் நம்மை நிம்மதியாக இருக்க விடவில்லை. மருத்துவமனைகளில் இடமில்லை, ஆக்சிஜன் பற்றாக்குறை என வரிசையாக பல செய்திகள் நம்மை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது.

இதனை சமாளிக்கத்தான் நாம் வார் ரூமை ஏற்படுத்தினோம். மக்களின் கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்டோம். முடிந்தவரை நிவர்த்தி செய்தோம். கோரிக்கைகளே வராத சூழ்நிலையை இப்போது உருவாக்கியிருக்கிறோம். லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியதே இந்த 100 நாளின் பெரிய சாதனை.

எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என உங்களையும் என்னையும் ஏமாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. படிப்படியாக அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்பது உறுதி.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளுக்கும் தாயுள்ளத்தோடு திட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரியில்லாத பட்ஜெட்டை கொடுத்திருக்கிறோம். இப்போதுதான் தொடங்கியிருக்கிறோம்.

அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். கருணாநிதி சொன்னது இன்னும் என் மனதில் ஆழமாக பதிந்திருக்கிறது. சொன்னதை செய்வோம், செய்வதைச் சொல்வோம். அவர் இருந்து செய்ய வேண்டியதை அவருடைய மகன் நிச்சயம் செய்வான்.

5 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 100 நாட்கள் என்பது 18-ல் ஒரு சதவீதம் தான். ஆனால், 100 நாட்களில் அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டால் 3 மணிநேரம் ஆகும். நாள் முழுக்க நாட்டுக்காக உழைக்கிறோம். தமிழகத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தரும் நாட்களாக இந்த 100 நாட்கள் அமைந்திருக்கிறது.

நிதிநிலைமை மட்டும்தான் கொஞ்சம் கவலை தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அதையும் விரைந்து சீர்செய்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சீர்மிகு தமிழகத்தை உருவாக்குவோம். இந்த பெரும் பொறுப்பை நான் என் தோள் மீது சுமக்க தயாராகிவிட்டேன்.

நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் என் பயணத்தைத் தொடர்வேன். எனது அரசாகத்தான் முதலில் உருவானது. எனது அரசு அல்ல இது, நமது அரசு. இதுதான் என் கொள்கை. வாழ்த்த மனமில்லாதவர்களையும் வென்றெடுக்க அடுத்த 100 நாட்களில் நாங்கள் இரண்டு மடங்கு உழைப்போம்".

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x