Published : 14 Aug 2021 01:05 PM
Last Updated : 14 Aug 2021 01:05 PM
நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும் என்று தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா இ-பட்ஜெட்டாக, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (ஆக. 14) கலைவாணர் அரங்கில் நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்தார்.
இதில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் உட்பட பல அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
அதில் உள்ள சிறப்பம்சங்கள்:
* கோயம்புத்தூரில் உள்ள வளங்குன்றா வேளாண்மைக்கான துறை ‘நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்’ என பெயர் மாற்றம் செய்து, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மைக்கான ஆராய்ச்சி மையம் உருவாக்கி இயற்கை வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளை வலுப்படுத்த ரூ.3 கோடி.
* மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம் ரூ.33.03 கோடியில் செயல்படுத்தப்படும். பாரம்பரிய நெல் வகைகளைத் திரட்டி, பாதுகாத்து, விதை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில், நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும்.
* வேளாண்மை பட்டதாரிகள் மற்றும் இதர இளைஞர்கள் வேளாண்மை பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் ரூ.7.68 கோடியில் செயல்படுத்தப்படும். மேலும் அவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படும்.
* வேளாண்மையின் மகத்துவத்தை இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில், சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம்.
*மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி, கடப்பாரை, கதிர் அரிவாள் அடங்கிய "வேளாண் உபகரணங்கள் தொகுப்பு" அரை இலட்சம் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக ரூ.15 கோடி ஒதுக்கீடு.
*இயற்கை வேளாண்மை, ஏற்றுமதி, புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாநில அளவிலான பரிசு.
வேளாண் தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகளை அவ்வப்போது ஆய்வு செய்து, தீர்வு காண மாநில அளவில் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT