Published : 28 Feb 2016 02:26 PM
Last Updated : 28 Feb 2016 02:26 PM
கன்னியாகுமரி மாவட்ட மதிமுக செயலாளராக இருந்த தில்லைசெல்வம் அண்மையில் திமுகவுக்கு தாவினார். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் இம்மாவட்டத்தில் வலுவான பிரதிநிதித்துவம் வைத்திருந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு இப்போது இங்கு மக்கள் பிரதிநிதிகளே இல்லை. இதனால் வரும் தேர்தலில் மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சேர்ந்து மக்கள் நலக் கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணியில் சேர தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை மக்கள் நலக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலுவாக உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் மதிமுக உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இம்மாவட்டத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றவில்லை.
கட்சி மாறியவர்கள்
மதிமுகவை பொறுத்தவரை அக்கட்சிக்காக மேடைதோறும் முழங்கி வந்த நாஞ்சில் சம்பத், இப்போது அதிமுகவில் பேச்சாளராக உள்ளார். சில மாதங்களுக்கு முன் மதிமுக மாவட்ட செயலாளராக இருந்த தில்லைசெல்வம், திமுகவில் இணைந்தார். இப்போது புதிய மாவட்ட செயலாளராக வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்ஜோசப் அதிமுகவில் இணைந்தார். இப்போது அடைக்கா குழி உள்ளிட்ட பகுதிகளில் இடதுசாரிகளின் கோட்டைகளில், இவர் அதிமுகவுக்கு, மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரத்தோடு இணைந்து கிளைகள் அமைத்து வருகிறார்.
வெற்றியும்- தோல்வியும்
முகாம் மாறியவர்களுக்கு, பதிலடி கொடுக்கும் வகையிலும், தனது இருப்பை உறுதி செய்து கொள்வதிலும் மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளது.
கடந்த 2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் சார்பில் களம் இறங்கிய ஏ.வி.பெல்லார்மின் வெற்றி பெற்றார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திருவட்டாறு, விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். தொடர்ந்து திருவட்டாறு தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்டு விட, 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் லீமாறோஸ், காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணியிடம் தோற்றுப்போனார்.
எனவே இம்முறை மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகள், தொழிலாளர்களின் பிரச்சினைகள் ஆகியவற்றை மையப்படுத்தி களம் காண தயார் ஆகி வருகின்றன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை, தேனீ ஆராய்ச்சி மையம், நெய்யாறு இடதுகரை கால்வாய் விவகாரம், மோசமான சாலைகள், பழுதான பேருந்துகள், ஏ.வி.எம் கால்வாய், தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை அமைப்பினர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மேற்கு மாவட்டத்தில் கணிசமாக உள்ள ரப்பர், முந்திரி தோட்டத் தொழிலாளர்கள் விளிம்பு நிலை மக்களின் வாக்குகள் மக்கள் நலக் கூட்டணிக்கு கிடைக்குமா என்பது போக, போகத் தான் தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT