Last Updated : 07 Feb, 2016 09:53 AM

 

Published : 07 Feb 2016 09:53 AM
Last Updated : 07 Feb 2016 09:53 AM

50 ஆண்டுகளுக்குப் பிறகு பொற்றாமரைக் குளத்தில் காவிரி நீர்: மகாமகக் குளத்தில் சோதனை அடிப்படையில் தண்ணீர் திறப்பு

ஹேமபுஷ்கரணி என்கிற கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி ஆற்றிலிருந்து நேற்று தண்ணீர் விடப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதேபோல மகாமகக் குளத்திலும் சோதனை அடிப்படையில் தண்ணீர் விடப்பட்டது.

108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு இணையாகப் போற்றப்படுவது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி சுவாமி கோயில். சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்குச் சொந்த மானது பொற்றாமரைக் குளம். பிரளய காலத்தில் அமிர்தம் விழுந்த இடமாக கும்பகோணம் மகாமகக் குளமும், பொற்றாமரைக் குளமும் திகழ்கின்றன.

ஆண்டுதோறும், மாசி மாதத்தில் இக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. அதில் புனித நீராடினால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தகைய சிறப்பு பெற்ற இத்திருக்குளத்தில் மகாமகத் தின்போது பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். மகாமகத்தை முன்னிட்டு இக்குளம் ரூ.72 லட்சத்தில் தூர்வாரப்பட்டது. தொடர்ந்து காவிரி ஆற்றிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்துக்கு குழாய் பதிக்கும் பணி ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றது. இந்நிலையில் பொதுப்பணித் துறையினர் மேற்கொண்ட பணிகள் நிறைவடைந்ததையடுத்து காவிரி ஆற்றிலிருந்து குளத்துக்கு வரும் நீர்வழித்தடத்தைக் கண்டுபிடித்து சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சோதனை முறையில் பொற்றாமரைக் குளத்தில் தண்ணீர் விடப்பட்டது.

மகாமக குளத்தில்…

இதேபோல கும்பகோணம் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரிக்காக சுமார் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் விடப்பட வேண்டும். இதையொட்டி சோதனை முறையில் நேற்று கும்பகோணம் நகராட்சியின் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து மகாமகக் குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை நகர்மன்ற தலைவர் ரத்னாசேகர், ஆணையர் உமாமகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் ராஜகோபால் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதிகாரிகள் ஆய்வு…

மகாமகத்தையொட்டி கும்ப கோணத்தில் பொதுப்பணித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை பொதுப்பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் திருமாறன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் அசோகன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

மகாமகக் குளத்துக்குச் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை இருவரும் பார்வை யிட்டனர். அரசலாற்றுக்குச் சென்று மகாமகக் குளத்துக்கு தண்ணீர் வரும் நீர்வழிப் பாதையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பொற்றாமரைக் குளத்துக்குச் சென்று காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் வருவதைப் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தனர்.

பின்னர், முதன்மை தலைமைப் பொறியாளர் திருமாறன் செய்தியாளர்களிடம் கூறியபோது, “மகாமகப் பெருவிழாவுக்காக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் 7-ம் தேதி (இன்று) இரவு கல்லணைக்கு வந்துவிடும். பின்னர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு, பிப்ரவரி 8, 9 ஆகிய தேதிகளில் காவிரி மற்றும் அரசலாற்றில் பகிர்ந்தளிக்கப்படும்.

மகாமகக் குளம், பொற்றாமரைக் குளத்தில் தேக்கப்படும் நீரின் அளவை அதிகரிக்காமல் பழைய நீரை வெளியேற்றிவிட்டு புதிய நீரை நிரப்பும் பணியை பொதுப்பணித் துறையினர் மேற்கொள்வார்கள்” என்றார்.

இரும்பு தடுப்புகள் அகற்றப்பட்டன

மகாமக குளத்தைச் சுற்றி 4 கரைகளிலும் 12 அடி உயரத்துக்கு இரும்புக் கம்பிகள் கொண்ட 183 இணைப்புகளால் மிகப்பெரிய தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மகத்தின்போது இந்த தடுப்புகளை அகற்றுவதில்லை. மகாமகப் பெருவிழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குளக்கரையில் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன.

கும்பேஸ்வரர் கோயிலில் மகா ருத்ர யாகம்

மகாமகப் பெருவிழா சிறப்பாக நடைபெறவும், எந்த விதமான பிரச்சினைகள், விபரீதம் நேரிடாமல் விழா நடைபெற வேண்டும் என்பதற்காகவும் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று மகா ருத்ர யாகம் நடைபெற்றது. 100 சிவாச்சாரியார்கள் பங்கேற்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மகா ருத்ர யாகத்தை நடத்தினர். ஏற்பாடுகளை சிங்கப்பூர் ‘அன்பே சிவம்’ அமைப்பினர் செய்திருந்தனர்.

சுவாமிகள் வீதியுலா ஒத்திகை

கும்பகோணத்தில் 22-ம் தேதி நடைபெறும் மகாமக தீர்த்தவாரிக்காக 12 சிவன் கோயில்களில் உள்ள சுவாமிகள் மற்றும் அஸ்திர தேவர்கள் தீர்த்தவாரிக்காக மகாமகக் குளத்துக்கும், 5 வைணவ கோயில்களின் சுவாமிகள் காவிரி ஆற்றின் சக்கரப் படித்துறைக்கும் புனித நீராடச் செல்வார்கள். இதையொட்டி, நேற்று காலை அந்தந்த கோயில்களில் சுவாமிகளை சுமந்து வரும் பட்டறைகளை மட்டும் கொண்டு வீதியுலா ஒத்திகை நடைபெற்றது.

இந்த ஒத்திகையை அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி, கூடுதல் ஆணையர்கள் கவிதா, திருமகள் ஆகியோர் ஆய்வுசெய்தனர். அதேபோல காவிரி ஆற்றுக்கு வரும் சுவாமிகளின் பட்டறைகளை கூடுதல் ஆணையர் ஞானசேகரன் ஆய்வு செய்தார்.

இஸ்லாமியர் வழங்கிய 1,100 மூட்டை அரிசி

மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவுள்ள பிராமணர் சங்கம், இஸ்கான் அமைப்பினர், ரோட்டரி சங்கத்தினர், தேப்பெருமாநல்லூர் சிவன் கோயில் அன்னதானக் கமிட்டி, அகில பாரத துறவியர் மாநாட்டு அமைப்பினர், குடந்தை ஜவுளி சங்கத்தினர் மற்றும் காவல் துறையினருக்கென மொத்தம் 1,100 மூட்டை அரிசி மற்றும் அரை லிட்டர் கொள்ளளவு கொண்ட 1 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கும்பகோணம் ‘ஒயிட் ஹவுஸ்’ உரிமையாளர் அப்துல் பாரி நேற்று அந்தந்த அமைப்பினரிடம் வழங்கினார்.

மகாமக குளத்தில் கோவிந்த தீட்சிதருக்கு சிலை

கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி கோயிலுக்கு நேற்று முன்தினம் வந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘‘மகாமகக் குளத்தை நிறுவிய கோவிந்த தீட்சிதரின் உருவச் சிலையை மகாமகக் குளத்தில் அமைத்து அதனை நினைவுச் சின்னமாக்க வேண்டும்.

அமெரிக்காவின் சிகாகோ நகரத்தில் இந்து சமயம் குறித்து பிரச்சாரம் செய்தபின்னர் விவேகானந்தர், கும்பகோணத்துக்கு வந்து 3 நாட்கள் தங்கியிருந்ததை நினைவுகூரும் வகையில் விவேகானந்தருக்கும் கும்பகோணத்தில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x