Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM

கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ள 300 படுக்கைகள் அமைப்பு; பெரியார் நகரில் மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை

கரோனா தொற்று 3-ம் அலையை எதிர்கொள்ள பெரியார் நகரில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்டபெரியார் நகரில் ரூ.15 கோடியே52 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுதிறந்து வைத்தார். தொடர்ந்து,மேம்படுத்தப்பட்ட அம்மருத்துவமனையை பார்வையிட்டு, நவீனமருத்துவ கருவிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனை கடந்த 34 ஆண்டுகளாக 100 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. தற்போது அம்மருத்துவமனை 300 படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. கரோனா 3-ம் அலையைஎதிர்கொள்ளும் வகையில் பெரியோருக்கு 200 படுக்கைகளும், குழந்தைகளுக்கு 100 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

இம்மருத்துவமனையில் நோயாளிகளின் சிகிச்சைக்காக சிடி ஸ்கேன், உயர்ரக கருவிகள்கொண்ட நவீன ஆய்வுக்கூடம், நுண்கதிர் வீச்சகம், 6 KL கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க், ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய உயர்ரக மருத்துவ உபகரணங்களுடன் 10 படுக்கைகள் கொண்ட முழு அளவிலான தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால சிகிச்சைப் பிரிவு, 500 KVA கூடுதல் டிரான்ஸ்பார்மர், 250 KVA ஜெனரேட்டர் வசதி, குளிர்சாதன வசதி கொண்ட அறுவை அரங்குகள், நோயாளிகளின் விவரங்கள் உறவினர்கள் அறியும் வகையில் நவீன டிஜிட்டல் தகவல் பலகை, தாய் - சேய் நலன் காக்க ரத்த சேமிப்பு வசதிகளுடன் கூடிய சிறப்பு மகப்பேறு பிரிவு, குளிர்சாதன வசதி கொண்ட சிறப்பு வார்டுகள், சிறப்பு புறநோயாளிகள் பிரிவு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகிய வசதிகள் உள்ளன.

மருத்துவமனை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதோடு 24 மணிநேரமும் சுழற்சிமுறையில் இயங்கும் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

100 நாள் சாதனைகள்

இந்த நிகழ்ச்சியில் அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் எவர்வின் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு, சட்டப்பேரவை உறுப்பினர் தாயகம் கவி, பொதுப்பணித் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x