Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது மட்டும் அல்லாமல் முதல்வர் கொடி ஏற்ற உள்ள கோட்டையைச் சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதை சீர்குலைக்க தீவிரவாதிகள் முயற்சி மேற்கொள்ளலாம். எனவே, அனைத்து மாநில போலீஸாரும் உஷார் நிலையில் இருக்கும்படி மத்திய உளவுத் துறை மாநில அரசுகளை கேட்டுக் கொண்டது. இதையடுத்து தமிழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் கடல் வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவி விடக்கூடாது என்பதற்காக 13 கடலோர மாவட்டங்களிலும் கடலோரக் காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும வீரர்கள் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர தமிழகம் முழுவதும் முக்கிய சுற்றுலாத் தலங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அணு உலை அமைந்துள்ள இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதுபோல் தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசித்து நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளார்.
சென்னையை பொறுத்தவரை 12 காவல் மாவட்ட எல்லையான பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அடையாறு, தியாகராய நகர், பரங்கிமலை, திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், புளியந்தோப்பு, அண்ணா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் போலீஸார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இது தவிர சென்னையிலுள்ள அனைத்து தங்கும் விடுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து ஏதேனும் தகவல் இருந்தால் காவல் துறைக்கு தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சென்னை பெருநகர் முழுவதும் சுற்றுக் காவல் ரோந்து வாகனங்கள் மூலம் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் ட்ரோன் (Drone Camera) மூலம் கண்காணித்தும், நகரின் முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகனத்தணிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின விழா பேருரையாற்ற உள்ளார். இதனையொட்டி சென்னை கோட்டை முழுவதும் 5 அடுக்குபாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கோட்டை முழுவதும், நவீன சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேரடி மேற்பார்வையில், கூடுதல் காவல் ஆணையர்கள் என்.கண்ணன் (தெற்கு), செந்தில் குமார் (வடக்கு), பிரதீப் குமார் (போக்குவரத்து) தலைமையில் 15 ஆயிரம் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விழா முடியும் வரைகோட்டையைச் சுற்றி போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT