Published : 14 Aug 2021 03:20 AM
Last Updated : 14 Aug 2021 03:20 AM
ஸ்மார்ட் சிட்டி நிதி ரூ.21 கோடியில் கட்டிய இரு தடுப்பணைகளில் இதுவரை ஒரு முறை கூட தண்ணீர் தேக்கப்படவில்லை. கழிவு நீர் மட்டுமே தேங்கி வைகை ஆறு சுகாதாரக் கேடாக மாறியுள்ளது.
மதுரை வைகை ஆற்றில் கடந்த கால் நூற்றாண்டாகவே இயல்பான நீரோட்டம் இல்லை. அணையில் நீர் திறந்தால் மட்டுமே தண்ணீர் ஓடுகிறது. மற்ற காலங்களில் வெறும் சாக்கடை நீரும், தனியார் நிறுவனங்களால் திறந்துவிடப்படும் ரசாயனக் கழிவு நீர் மட்டுமே ஓடுகிறது. வைகை ஆறு நகரின் மையப்பகுதியில் ஓடு வதால் அதன் கழிவு நீரும், துர் நாற்றமும் அந்த ஆற்றை தினமும் கடந்து செல்வோரின் முகங்களைச் சுளிக்க வைக்கிறது. புகழ்பெற்ற ஆன்மிகத் தலமாக விளங்கும் மதுரைக்கு உள்நாட்டு மக்களும், வெளிநாட்டினரும் அதிகளவு வந்து செல்கின்றனர்.
வறட்சிக்கு இலக்கான மதுரை வைகை ஆற்றை மீட்டெடுக்கவும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அதனை அழகுபடுத்தவும் ஆற்றின் குறுக்கே ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் அருகே ஒரு தடுப்பணையும், ஒபுளாபடித்துறை பகுதியில் மற்றொரு தடுப்பணையும் ரூ.21 கோடியில் கட்டப்பட்டன. வைகை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது இந்தத் தடுப்பணைகளில் தண்ணீரை தேக்கி வைத்து நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், இந்தத் தடுப்பணைகள் கட்டி 3 ஆண்டுகளாகிவிட்டன. இது வரை ஒருமுறைகூட தண்ணீர் தேக்கவில்லை. வைகை அணையில் தண்ணீர் திறந்து ஆற்றில் தண்ணீர் வந்தாலும் தடுப்பணைகளின் ஷட்டர் திறக்கப்பட்டு அப்படியே முழுவதுமாக திறந்துவிடப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் வற்றியதும் வழக்கம்போல் தடுப்பணைகளில் கழிவுநீரே தேங்கி நிற்கிறது. அதனால், வைகை ஆறு கொசு உற்பத்தி மையமாக மாறியதோடு துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர் கேட்டை ஏற்படுத்துகிறது. எந்த நோக்கத்துக்காக வைகை ஆற்றில் ஸ்மார்ட் சிட்டி நிதி ரூ.21 கோடியில் தடுப்பணையை மாநகராட்சி கட்டியதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பொதுப்பணித் துறை தடுப்பணை களைக் கட்டியதோடு சரி, அதன் செயல்பாட்டை கண்காணிப்பதே இல்லை. வைகை ஆற்றைப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வில்லை. அதனால், வைகை ஆற்றில் நிரந்தரமாக ஆகாயத் தாமரைகள் படர்ந்து நீரோட்டம் பாதிக்கிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகளிடம் கேட்டபோது, தடுப் பணைகள் தண்ணீரைத் தேக்கி வைப்பதற்காக மட்டுமே கட்டப் படவில்லை. ஆற்றில் நீர் கரை புரண்டு ஓடும்போது அதன் வேகத் தைத் தடுத்து நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை நிலைநிறுத்தவே கட்டப்பட்டது. அதன் நோக்கம் நிறைவேறி உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் தற்போது உயர்ந்துள்ளது. ஆற்றில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT