Last Updated : 14 Aug, 2021 03:21 AM

 

Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM

பட்ஜெட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய அறிவிப்பு: 25 ஆண்டுகால எதிர்பார்ப்பு நிறைவேறும் என திருச்சி மாநகர மக்கள் மகிழ்ச்சி

திருச்சி

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் ஏற்படுத்தப்படும் என்று நேற்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு திருச்சி மாநகர மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள திருச்சியில் இருந்து மாநிலத்தின் எந்தவொரு பகுதிக்கும் போக்குவரத்து வசதி உள்ளதால், சில மணி நேரங்களில் சென்றுவிடலாம். இதனால், திருச்சி மத்திய பேருந்து நிலையம் வழியாக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், தனியார் பேருந்துகள் என தினமும் 2,500-க்கும் அதிகமான பேருந்துகள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக, மாநகரிலும், மத்திய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்பகுதி சாலைகளிலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.

போக்குவரத்து நெரிசலைக் களையும் வகையில் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என 1996-ம் ஆண்டு முதலே அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் 2001- 2006 அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, 2006- 2011 திமுக ஆட்சியில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்தது. இருப்பினும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளையும் அப்போதைய திமுக அரசு மேற்கொண்டது.

அதன்படி, பஞ்சப்பூரில் 244.28 ஏக்கரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க முடிவு செய்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

2011-ல் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, பஞ்சப்பூரை கைவிட்டு புதிய இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். ஆனால், இடத்தை இறுதி செய்ய முடியாத நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வரான பழனிசாமி, திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அது வெறும் அறிவிப்பாகவே நின்றுவிட்டது.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று மக்கள் பெரிதும் நம்பினர். ஆனால், அரசுத் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பிய போதெல்லாம், மாநில நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்படும் என்றும், முதல்வரிடம் இசைவு பெற்ற பிறகே அறிவிக்கப்படும் என்றும் கூறி வந்தார்.

அதேவேளையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆட்சியர் சு.சிவராசு, மாநகராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்ய ஆய்வு நடத்தினர்.

இதற்கிடையே, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் ஏற்படுத்தப்படும் என்று மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இதன்மூலம் திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்ற திருச்சி மக்களின் 25 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு திருச்சி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, மாநகர வளர்ச்சி மேம்பாட்டுக் குழுவின் செயற்குழு உறுப்பினர் வி.பி.ஜெகநாத் கூறும்போது, ‘‘திருச்சி மக்களின் 25 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறும் காலம் வந்துள்ளது. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. இதன்மூலம் புதிய திருச்சி உருவாகும்’’ என்றார்.

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில ஆலோசகர் கே.சி.நீலமேகம் கூறும்போது, “வணிக வளாகத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x