Published : 14 Aug 2021 03:21 AM
Last Updated : 14 Aug 2021 03:21 AM

20 ஆண்டுகளாக முடங்கியிருக்கும் திட்டம்; நாங்குநேரி பொருளாதார மண்டல மேம்பாட்டுக்கான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை: தென்மாவட்ட தொழில்துறையினர், இளைஞர்கள் ஏமாற்றம்

திருநெல்வேலி

தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காக கடந்த 2001-ல் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் கடந்த 20 ஆண்டுகளாக முடங்கியிருக்கும் நிலையில், அதற்கு புத்துயிர் ஊட்டும் வகையிலான அறிவிப்புகள் ஏதும் தமிழக பட்ஜெட்டில் இல்லை. இது தொழில்துறையினருக்கு மட்டுமின்றி, இளைஞர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிரு க்கிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் கனவுத்திட்டம் என்று சொல்லப்படும் இத்திட்டத்து க்கு, கடந்த 2001-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணா நிதி அடிக்கல் நாட்டினார். ஆனால், அடுத்துவந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பின்னர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது இத் திட்டத்துக்கு புத்துயிரூட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கடந்த 2008-ம் ஆண்டில் ஹைதராபாத்தை சேர்ந்த ஏஎம்ஆர் கட்டுமான நிறுவனத்துடன் இணைத்து இத் திட்டத்தை தமிழக அரசின் தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (TIDCO) நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ரூ. 15,000 கோடி வரை முதலீடுகளை ஈர்க்கும் என்றும், இந்த தொழில் மண்டலத்தின் மூலம் 70,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கள் கிடைக்கும் என்றும் அப்போது அரசு அறிவித்திருந்தது.

தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுத்திடவும், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை பெருக்கிடவும், அங்கு தொழில் முனைவோரை ஊக்குவித்து தொழிற் சாலைகள் அமைப்பதற்கு உதவியாக, பல்வேறு பொருள் களின் உற்பத்திக்கான மையமாக வும் இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எழுந்தது.

இச்சிறப்பு பொருளாதார மண்டலத்தில் பொறியியல், மருத்துவவியல், வாகன உதிரி பாகங்கள், மின்னணு மற்றும் மென்பொருள்கள், தகவல் தொழில் நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து ஆகியவை தொடர் பான தொழில்களை தொடங்கிட திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்திருந்தது. ஆனால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் இத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. மேம்பாட்டுக்கான நடவடிக்கை களையும் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப் படவில்லை. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் இத் திட்டத்துக்கு புத்துயிரூட்டி, முழுசெயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது. இது தொடர்பாக பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில், நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல மேம்பாடு தொடர்பான அறிவிப்புகள் ஏதும் இல்லை. இதனால், ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக தென்மாவட்டங்களின் தொழில் துறையினரும், இளைஞர்களும் தெரிவிக்கிறார்கள்.

வேலைவாய்ப்பின்மையும்,ஜாதி மோதலும்

தென்மாவட்டங்களில் ஜாதி மோதல்களும், கொலை சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. இதற்கு வேலைவாய்ப்பின்மையே முக்கிய காரணம். ஜாதி மோதல்களை முடிவுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும், `தென்மாவட்டங்களில் ஜாதிரீதியான மோதல்கள் அதிகரிப்புக்கு காரணம் வேலைவாய்ப்பு இல்லாததே’ என்றும் இதனால் இப்பகுதியில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் அக்குழு அரசுக்கு பரிந்துரை செய்தது. வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வுகாணும் முயற்சியாகவே நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், அத் திட்டம் சரிவர செயல்படுத்தப்படவில்லை.

திருநெல்வேலியில் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை தொடர்கிறது. தென்மாவட்ட ஜாதி மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தை புத்துயிர்பெற செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இளைஞர்களின் கோரிக்கையாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x