Published : 13 Aug 2021 10:37 PM
Last Updated : 13 Aug 2021 10:37 PM
மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், "மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
1500 ஆண்டுகள் பழமை மிக்க மதுரை ஆதீனத்தின் 292-ஆவது பீடாதிபதியாக - சைவ சித்தாந்தத்தை பரப்பும் ஆன்மீகப் பணியில் அருந்தொண்டாற்றியவர்.
மிகச் சிறந்த பத்திரிக்கையாளராகவும் விளங்கிய மதுரை ஆதீனம் பல்வேறு மக்கள் சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் பேரன்பிற்கு உரியவராகத் திகழ்ந்தவர். அவரது மறைவு ஆன்மீகவாதிகளுக்கும் - சைவ சமயத் தொண்டிற்கும் பேரிழப்பாகும்.
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆதீனம் குருமகா சன்னிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9-ம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மதுரை கே.கே. நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (வெள்ளிக்கிழமை) மறைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT